புது டெல்லி:
பிரதமர் மோடி அரசின் கீழ் இந்தியா குழந்தை தொழிலாளர்கள் பிரச்சனைக்கு எதிராக சிறப்பாக போராடுகிறது என நோபல் பரிசு பெற்ற சமூக செயற்பாட்டாளர் கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்துள்ளார். இந்தியா தனது 100வது சுதந்திர தினத்தை 2047-ஆம் ஆண்டு கொண்டாடும்போது நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும், கல்வியில் சிறந்ததாகவும் இருக்கும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது:-
இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களை ஒழிப்பதற்கு சமூக மற்றும் அரசியல் பலம் இரண்டும் வேண்டும். மேலும் அரசுக்கு சமூக மற்றும் தனியார் துறையின் ஆதரவும் தேவைப்படும்.
குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான எனது நோக்கம் மகாத்மா காந்தியின் சிந்தனையில் தோன்றியது. சமூகத்தின் ஒவ்வொரு கடைசி நபரிடமும் இதை நான் கூறுவேன். நாம் குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க 2047 வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
உத்தரப்பிரதேசத்திலோ, பீகாரிலோ அல்லது இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள சமூக மற்றும் பொருளாதார அந்தஸ்தின் குறைந்த நிலையில் உள்ள ஒரு பெண் குழந்தை பள்ளி செல்வதற்கும், அவளது கனவுகளை நினைவாக்குவதற்கும் உள்ள வாய்ப்புகளை பெறுவதற்கு சுதந்திரம் அடைந்தவளாக இருந்தால். அன்று தான் இந்தியா முழு சுதந்திரம் அடைந்தது என்று அர்த்தம்.
இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான சட்டம் மிக அவசியம். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவரும் தொழிலாளர்களாக பணியாற்றக்கூடாது என்றும், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆபத்தான பணிகளில் ஈடுபடக்கூடாது என்றும் நம் சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை செயலுக்கு கொண்டு வருவது எப்போதும் சவால் நிறைந்தது தான். ஆனால் நம்மிடம் இருப்பது மிகவும் நல்ல சட்டம் என்பதை ஒத்துகொள்ள வேண்டும்.
இருப்பினும் நாம் குழந்தை தொழிலாளர்களை ஒழிப்பதற்கு சமூக மற்றும் அரசியல் ஆகியவற்றின் ஆதரவும் இணைந்து கிடைக்க வேண்டும். இதனை நாம் உடனடியாக செய்ய வேண்டும். இதை அரசாங்கம் தனியாக செய்ய முடியாது. சமூகமும், தனியார் துறையில் இணைந்து செயல்பட வேண்டும். இன்றும் சில நாடுகளில் ஒரு பெண் குழந்தை கால்நடைகளை போல வாங்கப்படுகிறது. விற்கப்படுகிறது. இதனுடன் ஒப்பிடும்போது இந்தியா பெரும் முன்னேற்றத்தை கண்டுள்ளது.
இத்துடன் பல குழந்தைகள் அடிமைகளாகவும், கடத்தப்பட்டும் விற்கப்படுகின்றன. பல லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளிகளில் இருந்து விரட்டப்படுகின்றன.
இவ்வாறு சத்யார்த்தி கூறினார்.