இந்தி தேசிய மொழி அல்ல; மக்கள் எந்த மொழியை பேச விரும்புகிறார்களோ அதை பேச விடுங்கள் – பாடகர் சோனு நிகம்

புதுடெல்லி,
இந்தி நமது தேசிய மொழி அல்ல என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் கன்னட நடிகர் சுதீப் சுட்டிக்காட்டி பேசினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய இந்தி நடிகர் அஜய் தேவ்கன், “தென்னிந்திய மொழிகளில் உள்ள படங்கள் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்படுவது ஏன்” என்று கேள்வி எழுப்பினார். இந்த விவாதம் பெரும் அதிர்வலையை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. 
இந்தி மொழி திணிப்பு என்பது சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ள நிலையில், 48 வயதான பாடகர் சோனு நிகம் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 
பீஸ்ட் ஸ்டுடியோவின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுஷாந்த் மேத்தாவுடனான உரையாடலின் போது பேசிய பாடகர் சோனு நிகம், நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி என்றாலும், இந்தி மொழி பேசாத மக்கள் மீது அந்த மொழியை திணிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது:-
“இந்தி நமது தேசிய மொழி என்று அரசியல் சட்டத்தில் எங்கும் எழுதப்பட்டிருப்பதாக எனக்கு தெரியவில்லை.நாட்டில் அதிகம் பேசப்படும் மொழியாக இந்தி இருக்கலாம் என்பது எனக்கு புரிகிறது. ஆனால் அதற்காக இந்தி நமது தேசிய மொழி அல்ல.
நீங்களும் இந்தி பேசுகிறீர்கள், ஆனால் அவர்கள் எதற்காக இந்தியில் பேச வேண்டும்? மக்கள் எந்த மொழியை பேச விரும்புகிறார்களோ அந்த மொழியை பேச விடுங்கள்.  
நீங்கள் ஏன் அவர்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு, நாட்டில் ஒரே மொழி மட்டுமே பேசப்பட வேண்டும் என்கிறீர்கள்.
நாம் ஏன் இதைச் செய்கிறோம்? ஏன் இந்த விவாதம் நடக்கிறது? உங்கள் அண்டை நாடுகளை பாருங்கள், நீங்கள் நம் நாட்டிற்குள் பிளவை உருவாக்குகிறீர்கள்.
உலகின் பழமையான மொழி தமிழ் என்பது நமக்கு தெரியுமா? சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் இடையே விவாதம் நடந்து வருகிறது. ஆனால், உலகிலேயே தமிழ்தான் மிகப் பழமையான மொழி என்று மக்கள் சொல்கிறார்கள் 
பஞ்சாபியர்கள் பஞ்சாபியில் பேசலாம், தமிழர்கள் தமிழில் பேசலாம், வசதியாக இருந்தால் ஆங்கிலத்தில் பேசலாம். நமது நீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்தும் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்பது என்ன நியாயம்?
நம் நாட்டில் இதுபோன்று திணிக்கவோ அல்லது  ‘நாங்கள் உயர்ந்தவர்கள், நீங்கள் எங்கள் மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள்’ என்பதை கொண்டுவந்தால், அவர்களால் எப்படி அது முடியும்? அவர்கள் இந்தியில் புலமை இல்லாதவர்கள், அவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச வசதியாக இருக்கிறது.
ஆங்கிலம் – இது நமது கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. நாட்டில் ஏற்கனவே நிறைய  பிரச்சினைகள் இருக்கின்றன. அதனால் மக்களை மேலும் பிளவுபடுத்த வேண்டாம். மற்றொரு பிரச்சினையை உருவாக்க வேண்டாம்.”
இவ்வாறு அவர் கூறினார்.
32 மொழிகளில் பாடிய சோனு நிகம், ஒரு விமான பயணத்தின்போது, இந்தியில் பேசியதாகவும், அதற்கு விமான பணிப்பெண் தனக்கு ஆங்கிலத்தில் பதிலளித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.