இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள்; அவர்களிடம் பேச இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் – நடிகை சுஹாசினி பேட்டி

இந்தி மொழி குறித்து சர்ச்சைகள் ஓயாத நிலையில், நடிகை சுஹாசினி, இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள், அவர்களிடம் பேசுவதற்காக நாம் இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். சுஹாசினியின் இந்த கருத்தை சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்து வருவதால் சர்ச்சையாகி உள்ளது.

அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி மொழியை நாட்டின் இணைப்பு மொழியாக அங்கிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என கூறினார். அமித்ஷாவின் கருத்துக்கு இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து பெரிய அளவில் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்தன. குறிப்பாக, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அமித்ஷாவின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதைத் தொடர்ந்து, இந்தி தேசிய மொழியா அல்லது இந்தியாவின் இணைப்பு மொழியா? அல்லது இந்தியாவின் இணைப்பு மொழி எது என்ற விவகாரம் சினிமா உலகினர் மத்தியிலும் சமூக ஊடகங்களிலும் விவாதிக்கப்படும் சர்ச்சையாகி உள்ளது.

கன்னட சினிமா நடிகர் கிச்சா சுதீஷ், திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது, இந்தி தேசிய மொழி அல்ல எனக் கூறினார். இதற்கு பதிலளித்த இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஹிந்தி தேசிய மொழி இல்லை என்றால் எதற்காக கன்னட சினிமாக்களையும் தமிழ் சினிமாக்களையும் இந்தியில் டப் செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பியதோடு, இந்திதான் எப்போதும் நாட்டின் தேசிய மொழி, இந்தியாவின் தாய் மொழியாக இருக்கும் என்று இந்தியில் பதிவிட்டார். அஜய் தேவ்கன் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த கிச்சா சுதீஷ், அது அப்படி அல்ல, நீங்கள் இந்தியில் பதிவிட்ட கருத்தை இந்தி எனக்கு தெரிந்ததால் புரிந்துகொண்டேன், இந்தியை பிரியத்துடன் படித்து வருகிறோம். ஒருவேளை அதற்கு நான் எனது தாய்மொழியான கன்னடத்தில் பதிவிட்டு வந்தால் உங்கள் நிலைமை என்ன என்று எண்ணிப் பார்க்கிறேன். நாங்களும் இந்தியர்கள் தானே சார் என்று பதிலளித்தார்.

இந்த இந்தி மொழி சர்ச்சை கடந்த காலங்களில் தமிழ் திரையுலகிலும் பெரிய அளவில் விவாதமாகவும் சர்ச்சையாகவும் ஆகியுள்ளது. இதையடுத்து, ‘இந்தி தெரியாது போடா’ என்ற ஹேஷ்டேக் வைரலான வரலாறும் உண்டும்.

இயக்குனர் பா. ரஞ்சித், நீலம் பண்பாட்டு மையம் மூலம், மதுரை உலத் தமிழ்ச்சங்கத்தில் ஏற்பாடு செய்திருந்த வானம் வேர்ச்சொல் தலித் கலை இலக்கிய விழாவில் பேசுகையில், ‘வட இந்தியர்கள் தென்னிந்தியர்களைவிட மேலானவர்கள் என்றும், பல மாநிலங்களில் இந்தி பேசப்படுவதால், அது தேசிய மொழியென்றும் கருதப்படுகிறது. ஆனால், அதனை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம்’ என்று கூறினார்.

அப்போது செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், “ நாம் இந்தி மொழியை ஒருபோதும் தேசிய மொழியாக ஏற்கப்போவதில்லை. எனக்கான இணைப்பு மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி இருப்பது தவறில்லை. இந்தியாவில் திராவிடர்களுக்கான முக்கியத்துவம் அவசியம் என்று நான் கருதுகிறேன். திராவிடர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நிற்பது முக்கியமனது என்றும் நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.

சினிமா உலகில் இந்தி மொழி குறித்த சர்ச்சை ஓயாத நிலையில், இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவியும் நடிகையுமான சுஹாசினி இந்தி மொழி பேசுபவர்கள் நல்லவர்கள், அதனால், அவர்களிடம் பேசுவதற்காக இந்தி மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை சுஹாசினி செய்தியாளர்களிடம் கூறியாதாவது: “நாங்கள் எல்லாம் எல்லா மொழிகலையும் தெரிந்தே ஆக வேண்டும். எல்லா மொழிகளையும் மதித்தே ஆக வேண்டும். எங்க வீட்ல காலையில் சமைக்கிற பெண் தெலுங்குதான் பேசுவார்கள். இரவு சமைப்பவர் இந்திதான் பேசுவார்கள். எனக்கு இந்த மொழிதான் பிடிக்கும் அந்த மொழிதான் பிடிக்கும்னா சாப்பாடு கிடைக்குமா? எல்லா மொழியையும் தெரிந்துகொள்ள வேண்டும். எல்லாரும் எல்லா மொழியையும் சமமாக நினைக்க வேண்டும்” என்று கூறினார்.

அப்போது, செய்தியாளர் இந்தி தேசிய மொழி என்று கூறப்படுவது குறித்து நடிகை சுஹாசினியின் கருத்தைக் கேட்டார். அதற்கு நடிகை சுஹாசினி, “இந்தி ஒரு நல்ல மொழி கற்றுக்கொள்ள வேண்டியது முக்கியம். இந்தி பேசுகிறவர்கள் நல்லவர்கள். அதனால், அவர்களுடன் பேச வேண்டும் என்றால் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். அதே போல தமிழர்களும் நல்லவர்கள். அவர்களிடம் தமிழில் பேசினால் அவர்கள் இன்னும் சந்தோஷமாகி விடுவார்கள். என்னிடம் இந்த கேள்வியைக் கேட்டால் எனக்கு பதிலே சொல்லத் தெரியவில்லை. ஏனென்றால், எனக்கு எவ்வளவு மொழிகள் தெரிகிறதோ அவ்வளவு சந்தோஷம். பிரெஞ்சு மொழி கூட எனக்கு ரொம்ப புடிக்கும். பிரெஞ்சு மொழியும் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆசை. அதற்காக நான் தமிழ் இல்லை என்று ஆகிவிடுமா? அது மாதிரிதான்.” என்று தெரிவித்துள்ளார்.

நடிகை சுஹாசினி, “இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள், அதனால், அவர்களிடம் பேச இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்” என்ற கூறியதை, சமூக ஊடகங்களில் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், நெட்டிசன்கள் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன், நடிகை சுஹாசினி கருத்து குறித்து தனது முகநூல் பக்கத்தில், “நல்லவிங்களான இந்திக்காரங்க கிட்ட இந்தில பேசாட்டி நாம கெட்டவிங்களா தமிழ்நாட்டு சுஹாசினி மேடம்?” என்று பதிவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர், “உருது நல்ல மொழி. அதை கற்றுக் கொள்ள வேண்டும். இந்தி பேசுவோரைப் போன்றே அவர்களும் நல்லவர்கள். அவர்களிடமும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று சங்கிகளிடம் சொல்லுங்க மேடம்” என்று சுஹாசினியின் கருத்து குறித்து முகநூலில் பதிவிட்டுள்ளார்.

தலித் அரசியல் தொடர்பாக தொடர்ந்து முகநூலில் எழுதி வரும் ஸ்டாலின் தி, “நல்லவர்களும் கெட்டவர்களும் எல்லா மொழிகளிலும் உள்ளார்கள். இதில் இந்த மொழி பேசுபவர்கள் உயர்ந்தவர்கள் அந்த மொழி பேசுபவர்கள்தான் நல்லவர்கள் என்பது பாசிசத்திற்கான ஒரு வழி. சுகாசினி போன்ற இந்து சனாதனிகளிடம் அது வெளிப்படத்தான் செய்யும்.” என்று சுஹாசினியின் கருத்தை விமர்சித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.