புது டெல்லி:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேபாளத்தில் உள்ள இரவு விடுதியில் விருந்து ஒன்றில் கலந்துகொண்ட வீடியோ ஒன்று வைராகி வந்தது. மக்களுக்கு பணி செய்யும் அரசியல் தலைவர்கள் இதுபோன்ற கேளிக்கைகளில் கலந்துகொள்வது சரியா என்று பா.ஜ.கவினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
பாஜக சமூக வலைதள பிரிவுத்தலைவர் அமித் மால்வியா இந்த வீடியோவை பதிவிட்டு, மும்பை பிரச்சனையில் இருக்கும்போது ராகுல் காந்தி இரவு விடுதியில் இருக்கிறார். அவரது கட்சி சிதறிக்கொண்டிருக்கும்போது இரவு விடுதியில் அவர் நேரம் செலவழித்துகொண்டிருக்கிறார். விரைவில் காங்கிரஸ் கட்சி தனது தலைவர் பதவியையும் வெளியில் தான் குத்தகைக்கு விடப்போகிறது என கூறியிருந்தார்.
இதுகுறித்து பதிவிட்ட காங்கிரஸ் பொது செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா,
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாப் ஷெரிப் பிறந்தநாள் நிகழ்ச்சியில் யாரும் அழைக்காமல் பிரதமர் மோடி சென்று கலந்துகொண்டது போல, ராகுல் காந்தி யாரும் அழைக்காமல் செல்லவில்லை. நேபாளில் அவரது நண்பரின் தனிப்பட்ட திருமண விழாவிற்கு ராகுல் காந்தி சென்றுள்ளார். அவரது நண்பர் ஒரு பத்திரிக்கையாளரும் ஆவார். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் திருமண நிகழ்வில் கலந்துகொள்வது குற்றமாகாது. இது நம் கலாசாரத்தில் ஒன்றாகும்.
ஒருவேளை பிரதமர் மோடியோ அல்லது பாஜகவோ திருமணத்தில் கலந்துகொள்வதை கூட குற்றம் என கருதலாம். அதை முன்கூட்டியே எங்களிடம் சொல்லிவிட்டால் நாங்கள் எங்கள் பழக்கவழக்கங்களை மாற்றி நண்பர்களின் திருமண விழாவில் கலந்துகொள்ளாமல் இருப்போம் என கூறியுள்ளார்.
இதுகுறித்து திருமணத்திற்கு அழைத்த ராகுல் காந்தியின் நண்பர் பீம் உதாஸ் கூறுகையில், என் மகள் சும்னிமா உதாஸின் திருமணத்தில் தான் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அவருக்கு முறைப்படி அழைப்பு விடுத்தோம் என கூறியுள்ளார். பீம் உதாஸ் வெளியுறவு தூதராக இருந்தது குறிப்பிடத்தக்கது.