கொழும்பு:
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ஷே, பிரதமர் மகிந்த ராஜபக்ஷே பதவி விலக வேண்டும் என போராடும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷே பதவி விலக மாட்டேன் என உறுதியாக கூறி வருகிறார்.
இதையடுத்து நாளை கூடும் பாராளுமன்றத்தில் இலங்கை எதிர்க்கட்சி தலைவர்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இலங்கை அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதையடுத்து இலங்கை அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்ய புதிய சீர்திருத்த குழுவை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை எதிர்க்கட்சியின் மூத்த தலைவர் அஜித் பெரேரா கூறுகையில், நம்பிக்கை இல்லா தீர்மானம் சபாநாயகரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பில் அரசு தோற்றுவிட்டது என்றால், மகிந்த ராஜபக்ஷேவும், கேபினட் உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டியதை தவிர வேறு வழியில்லை என கூறினார்.
இலங்கை அரசியலமைப்பு பிரிவு 38-ன் படி அந்நாட்டின் பிரதமர் சுய விருப்பத்தின் பெயரில்லோ அல்லது நீண்ட குற்றச்சாட்டு நடவடிக்கைகளுக்கு பிறகோ தான் பதவியை விட்டு விலக முடியும்.
அரசியல் கட்சிகள் மகிந்த ராஜபக்ஷேவை பதவியை விட்டு விலக வலியுறுத்தி வரும் நிலையில், அந்நாட்டின் தலைமை புத்த கூட்டமைப்பும் ராஜபக்ஷேவை ராஜினாமா செய்யவிட்டு இடைக்கால அரசை நிறுவ வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து இலங்கை அரசு புத்தம் புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவை ஆராய அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதாக அறிவித்துள்ளது.
மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் பொறுப்புமிக்க நிர்வாகத்தை உருவாக்குவதற்காக அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என மகிந்த ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசுக்கு 113 உறுப்பினர்கள் கொண்ட பெரும்பான்மையை கொடுத்தால் இடைக்கால அரசை அமைக்க ஒப்புதல் வழங்குவதாக அந்நாட்டு அதிபர் கோத்தபய தெரிவித்து வருகிறார்.