இலங்கை நிவாரணத்திற்காக திமுக சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என, கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திமுக எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திமுக நிதி உதவி அறிவிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இலங்கை மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதை முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். முதற்கட்டமாக 40ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில், நல்லெண்ணம் கொண்ட அனைவரும் தங்களால் இயன்ற உதவியை இலங்கை மக்களுக்கு செய்திட நன்கொடை வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
மின்னணு பரிவர்த்தனை, காசோலை, வரைவு காசோலை, கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் மூலம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மக்களுக்கு உதவிட, நிதி வழங்குவோருக்கு 80ஜியின் கீழ் வருமான வரி விலக்கு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு பரிவர்த்தனை மூலம் நிதி உதவி வழங்குவோர் பணம் அனுப்பவேண்டிய வங்கிக்கணக்கு எண் மற்றும் காசோலை மற்றும் வரைவுக் காசோலையை எவ்வாறு அனுப்ப வேண்டும் என்ற குறிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM