தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன்.
இதற்கான மத்திய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
எனவே மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் வழங்கிடும் உதவிகள் இலங்கை மக்களுக்கு தேவையான பொருட்களாக வாங்கி அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.
மேலும், இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக தி.மு.க. சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்றும், தி.மு.க. எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்” திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.