சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர்
அண்ணாமலை
திடீர் பயணமாக கடந்த சனிக்கிழமை இரவு 12.45 மணிக்கு இலங்கை புறப்பட்டு சென்றார். ஆனால் அவரது பயணத் திட்டம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதுதான்.
இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக பல திட்டங்களை மோடி அரசு நிறைவேற்றி கொடுத்துள்ளது. எனவே மே 1-ந்தேதி தமிழர்கள் நடத்தும் தொழிலாளர்கள் தின விழாவில் பிரதமர் மோடியை அழைத்து நன்றி சொல்ல திட்டமிட்டு இருந்தார்கள்.
ஆனால் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்ததால் அவரால் கலந்துகொள்ள இயலவில்லை. எனவே அவருக்கு பதில்
அண்ணாமலை
அனுப்பப்பட்டுள்ளார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
3 நாட்கள் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அண்ணாமலை கொழும்புவில் இருந்து 182 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பழமையான சீதையம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
யாழ்ப்பாணம் சென்ற அவர் தமிழர்களின் நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளார். நல்லூர் கந்தசாமி கோவிலுக்கும் சென்றார். இந்த கோவில் இலங்கையில் தமிழர்களின் தொன்மையை பறைசாற்றும் மிக பழமை வாய்ந்த கோவில்.
ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 12 மீனவர்கள் இலங்கை படையினரால் சிறை பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை நேரில் சந்திக்க அண்ணாமலை விருப்பம் தெரிவித்திருந்தார். இதையடுத்து அந்த நாட்டு அரசாங்கம் ஜெயிலில் தமிழக மீனவர்களை சந்திக்க அனுமதி அளித்துள்ளது.
யாழ்ப்பாணம் ஜெயிலுக்கு சென்று மீனவர்களை நேரில் சந்தித்தார். அப்போது அவர்களுக்கு வழங்குவதற்காக உணவு மற்றும் உடைகள் கொண்டு சென்றார். அவற்றை மீனவர்களிடம் நேரில் வழங்கினார்.
அவர்களிடம் தைரியமாக இருக்கும்படி கூறிய அண்ணாமலை, மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இந்திய தூதரகத்தின் துரித முயற்சியால் விரைவில் விடுதலையாவீர்கள் என்று உறுதியளித்தார்.
அண்ணாமலை தனது சுற்றுப்பயணத்தின்போது தமிழ் தலைவர்களையும் சந்தித்து பேசினார். யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டணி தலைவர்களை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது மாவை சேனாதிராஜா, எம்.பி.சுமந்த்ரன், சி.வி.கே.சிவஞானம், எம்.பி.க்கள் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், ஸ்ரீதரன், டாக்டர் சத்யலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். சந்திப்பு முடிந்ததும் தமிழ் தேசிய தலைவர்களுடன் மதிய விருந்து சாப்பிட்டார்.