கோபன்ஹேகன்:”உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்; பேச்சு வழியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்சுக்கு, மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, ௧ம் தேதி இரவு புறப்பட்டு சென்றார். முதலில் ஜெர்மனிக்கு சென்ற பிரதமர் மோடி, பெர்லினில் அந்நாட்டு பிரதமர் ஓலப் ஸ்கோல்சை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.
ஜெர்மனி பயணத்தை முடித்த மோடி சிறப்பு விமானத்தில், டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனை சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு இந்திய முறைப்படி, மேள தாளங்கள் முழங்க சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. டென்மார்க் பிரதமர் மெட்டே ப்ரெடெரிக்சன், விமான நிலையத்துக்கு வந்து பிரதமர் மோடியை நேரில் வரவேற்றார்.
முதல் முறையாக டென்மார்க் சென்றுள்ள மோடியை, அவர் தன் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார். இருவரும் வர்த்தகம், அரசியல் என பல விஷயங்களில், இரு தரப்பு உறவு குறித்து பேசினர். உக்ரைன் – ரஷ்யா போரால் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றியும் ஆலோசித்தனர். பின், இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.
பிரதமர் மோடி கூறுகையில், ”உக்ரைனில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். பிரச்னைக்கு பேச்சு வழியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது,” என்றார்.
டென்மார்க் பிரதமர் மெட்டே ப்ரெடெரிக்சன் கூறுகையில், ”ரஷ்ய அதிபர் புடின், போர் நிறுத்தம் செய்து, உக்ரைனில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நிறுத்த வேண்டும். ”இந்தியா தன் செல்வாக்கை பயன்படுத்தி, உக்ரைனில் ரஷ்யாவை போர் நிறுத்தம் மேற்கொள்ள வைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார்.
இதையடுத்து, இந்தியா – டென்மார்க் வர்த்தகர்கள் வட்ட மேஜை கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, டென்மார்க்கில் வசிக்கும் இந்தியர்களையும் சந்தித்து பேசினார். அடுத்து, டென்மார்க்கில் இன்று நடக்கும் இரண்டாவது ‘இந்தியா – நார்டிக்’ மாநாட்டில், பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இந்த மாநாட்டில், 2018ல் நடந்த முதல் நார்டிக் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதான ஒத்துழைப்பு குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. மேலும், கொரோனாவுக்கு பிறகான பொருளாதார மீட்சி, பருவநிலை மாற்றம், தொழில்நுட்பத்தில் புதுமை, புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி, சர்வதேச பாதுகாப்பு நிலவரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
இந்த மாநாட்டில் பங்கேற்கும் ஐஸ்லாந்து, பின்லாந்து, சுவீடன் மற்றும் நார்வே பிரதமர்களையும் மோடி சந்தித்து பேசுகிறார். மாநாடு முடிந்து, இந்தியா திரும்பும் வழியில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து, தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரதமர் மோடி, அவருடன் இரு நாட்டு உறவு குறித்தும் பேசுகிறார்.