ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் 2024 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க இப்போதில் இருந்தே ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, பாஜக, காங்கிரஸ் இடையே போட்டா போட்டி நிலவி வருகிறது. இதனால், காங்கிரஸ் மேலிடம் தெலங்கானாவில் இம்முறையாவது ஆட்சியை பிடிக்க மும்முரமாக களத்தில் இறங்கி உள்ளது. அதன்படி, மாநில தலைவரை மாற்றியது. இளைஞரான ரேவந்த் ரெட்டிக்கு அப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது வரும் 6-ம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஹைதராபாத் வருகை தர உள்ளார். அன்று மாலை வாரங்கலில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு இரவு ஹைதராபாத்தில் தங்குகிறார். 7-ம் தேதி காலை காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் தெலங்கானா மாநில போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த உஸ்மானியா பல்கலை. மாணவர்களின் குடும்பத்தாரை சந்திக்கிறார். இதனிடையே உஸ்மானியா பல்கலைக்கழகத்திற்கு சென்று, தெலங்கானாவில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாட இருந்தார். இதற்கு தெலங்கானா அரசு அனுமதி மறுத்து விட்டது.