ஐதராபாத்: தெலங்கானாவில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழகம் நாட்டின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். முன்னாள் பிரதமர் பிவி. நரசிம்ம ராவ், தமிழக முன்னாள் ஆளுநர் எம். சென்னா ரெட்டி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் எஸ். ஜெய்பால் ரெட்டி உள்பட பல அரசியல் தலைவர்களை உருவாக்கிய பெருமை உடையது.இங்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்கள் இடையே வரும் 7ம் தேதி நடக்க உள்ள அரசியல் சாராத கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி கடந்த 23ம் தேதி கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கு பல்கலை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பல்கலை கழகத்தின் செயற்குழு கடந்தாண்டு நிறைவேற்றிய தீர்மானத்தின் படி, அரசியல் சம்பந்தபட்ட நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மாநில அரசின் தேர்வுக்கு மாணவர்கள் தயாராவதாலும், ஊழியர்கள் சங்க தேர்தல் நடைபெறுவதாலும், சில பாடப்பிரிவினருக்கு தேர்வுகள் நடப்பதாலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக, உஸ்மானியா பல்கலைத் தரப்பில் எடுத்து கூறப்பட்டுள்ளது.ஆனால், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலையீட்டினால் தான் ராகுல் காந்தியின் கலந்துரையாடலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெலங்கானா மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.