புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் குதூகலமாக இருந்தது. முதன்முறையாக முஸ்லிம்களை தேடிச் சென்று எதிர்கட்சி தலைவர் அகிலேஷ் சிங் யாதவ் மற்றும் மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பாதக் வாழ்த்தினர்.
கரோனா பரவலால் கடந்த இரண்டு வருட கால பண்டிகைளில் முஸ்லிம்கள் முடங்கியிருந்தனர். இந்த வருடம் கட்டுக்குள் வந்த கரோனா பரவலால் அதிக முஸ்லிம்கள் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் ரம்ஜான் குதூகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய அங்கமாக, காலையில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகள், மசூதிகள் மற்றும் ஈத்கா மைதானங்களில் நடைபெற்றன. இதே இடங்களில் இதற்கு முன் நடைபெற்றதை போல், கூட்டம் நிரம்பி அவற்றுக்கு வெளியே சாலைகளிலும், தெருக்களிலும் தொழுகைக்காக எவரும் நிற்கவில்லை.
இந்த நிலை தொழுகை, டெல்லியின் அருகிலுள்ள ஹரியானாவின் குருகிராமில் கடந்த ஒரு வருடமாக பிரச்சனையாகி வருகிறது. மசூதிகளில் இடமில்லாத நிலையில் முஸ்லிம்கள் சாலைகளில் தொழுவதற்கு இந்துத்துவா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இச்சூழல் உத்தரப் பிரதேசத்திலும் பரவும் நிலையில், அம்மாநில முதல்வரான யோகி அதித்யநாத் முதன்முறையாக எச்சரித்திருந்தார். இதை ஏற்கும் வகையில் உத்தரப் பிரதேசத்தில் தங்கள் எல்லைகளில் இருந்தபடி முஸ்லிம்கள் அமைதியாக தொழுகைகளை நடத்தி இருந்தனர்.
இதனிடையே, உத்தரப் பிரதேசத்தில் முதன்முறையாக முஸ்லிம்களை தேடிச் சென்று அரசியல் தலைவர்கள் இந்த வருடம் வாழ்த்து தெரிவித்தனர். இதில், முதல் நபராக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் சிங் யாதவ் இடம்பெற்றிருந்தார். இவர் லக்னோவின் ஈத்காவிற்கு நேரில் சென்று தொழுகை முடியும் வரை காத்திருந்தார். பிறகு அங்கு தொழுகையிலிருந்த பிரங்கி மெஹல் மதரஸாவின் மவுலானா காலீத் ரஷீதையும் சந்தித்தார். இவருடன் சேர்த்து முஸ்லிம்கள் பலரையும் கட்டியணைத்து அகிலேஷ் ரம்ஜான் வாழ்த்துக்கள் தெரிவித்தார். இது, அவரது சமாஜ்வாதிக்கு தேர்தலில் தோல்வி கிடைத்த பின் முஸ்லிம்களின் எதிர்ப்பை சந்தித்து வரும் நிலையில் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து, உத்தரப் பிரதேசத்தில் முதன்முறையாக துணை முதல்வர் பதவி ஏற்றிருந்தும் பிரஜேஷ் பாதக்கும் லக்னோவின் ஈத்காவிற்கு நேரில் சென்று முஸ்லிம்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த ஈத்காவில் உபியின் முக்கிய முஸ்லிம் தலைவர்களான மவுலானா பஜுலூர் ரஹமான், டாக்டர்.கல்பே நூரி உள்ளிட்டப் பலரும் இருந்தனர். இங்கிருந்து அகிலேஷ், அருகிலுள்ள சஜாத் பாக்கிற்கும் சென்று முஸ்லிம்களை வாழ்த்தினார்.
ஆக்ராவின் தாஜ்மகாலிலும் இரண்டு வருடங்களுக்கு பின் ரம்ஜான் தொழுகை நடைபெற்றது. இது, முகலாய மன்னர் ஷாஜஹானால் இதனுள் கட்டப்பட்ட ஷாயி மசூதியில் நடைபெற்றது. இதனுள், இந்திய தொல்பொருள் ஆய்வகம் சார்பில் சுமார் இரண்டு மணி நேரம் முஸ்லிம்களுக்கு மட்டும் என இலவசமாக அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இக்காட்சியை தாஜ்மகாலை காணவந்த வெளிநாட்டினர் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் தங்கள் கைப்பேசிகளில் படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இத்துடன் மதரீதியானப் பதற்ற நகரங்களாகக் கருதப்படும் அலிகர், புலந்த்ஷெஹர், வாரணாசி, பிரயாக்ராஜ், மீரட், சஹரான்பூர், பரேலி உள்ளிட்ட பகுதிகளின் மசூதி, ஈத்காக்களிலும் தொழுகைகள் அமைதியாகவே முடிந்தன.
குறிப்பாக, வாரணாசியில் கங்கா-ஜமுனா நதிகள் இணைப்பை போன்ற உறவு இந்து – முஸ்லிம்கள் இடையே இருப்பதாகக் கூறுவது உண்டு. இதை மீண்டும் நினைவுறுத்தும் வகையில், வாரணாசியின் காசி வித்யா பீடத்தின் அருகிலுள்ள ஈத்காவின் காட்சிகள் பார்க்க முடிந்தது.
இங்குத் தொழுகை முடித்து வந்த முஸ்லிம்களுக்கு அப்பகுதியின் இந்துக்கள் கொதிக்கும் கோடையால் சர்பத் பானம் அளித்து உபசரித்தனர். இதேபோன்ற காட்சிகள் கடந்த மாதம் முடிந்த மார்ச்சில் இந்துக்களுக்கு சர்பத் பானம் அளித்து முஸ்லிம்கள் அன்பு காட்டியிருந்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் அனைத்தும் சேர்த்து மொத்தம் 31,151 இடங்களில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தியதாக தெரிகிறது. இவற்றில், 7436 ஈத்கா மற்றும் 19,949 மசூதிகள் ஆகியவையும் இடம் பெற்றிருந்தன. இவற்றில் 2846 மசூதி மற்றும் ஈத்காக்களில் உத்தரப் பிரதேச போலீஸாரின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. இதில், மத்திய பாதுகாப்பு படையினரும் இடம்பெற்றனர்.
இதுபோல், இந்து மற்றும் முஸ்லிம்களின் பண்டிகை நாட்களில் உத்தரப் பிரதேசத்தின் பொதுமக்கள் தங்களுக்குள் பலரும் நேரில் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது உண்டு. இந்த நிகழ்வும் சேமியா உள்ளிட்ட இனிப்புகளுடன் இரண்டு வருடங்களுக்கு பின் இன்று முஸ்லிம்கள் இடையே பார்க்க முடிந்தது.