திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் அமைந்துள்ளது திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனையை 2010-ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தார். ஏறக்குறைய 500 படுக்கை வசதிகளுடன் அமைந்துள்ள இந்த மருத்துவமனையில் நாளொன்றுக்கு சுமார் 1,500 நோயாளிகள் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகள் அனைத்தும் அருகில் உள்ள தண்டலை என்னும் கிராமத்தில் திறந்தவெளியில் கொட்டப்படுவதாக அந்த கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து அந்த பகுதிக்கு நேரில் சென்று பார்த்தோம். நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்பட்ட ஊசிகள், சிரஞ்ஜிகள், இரத்த கறை படிந்த பஞ்சுகள் போன்ற, மருத்துவ கழிவுகளைத் தண்டலை கிராமத்தில்தான் சுமார் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவமனை நிர்வாகம் கொட்டி வருவதாகவும், இதனால் எங்கள் கிராமத்தில் வசிக்கக்கூடிய மக்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாகவும், வேதனை தெரிவித்தனர் தண்டலை கிராமப் பகுதி மக்கள்.
இது குறித்துப் பேசிய தண்டலை கிராம மக்கள் சிலர், “பல தலைமுறையா இந்த கிராமத்துல தான் வாழ்ந்திட்டுருக்கோம். கிட்டத்தட்ட 2,000 குடும்பங்கள் இந்த கிராமத்துல இருக்காங்க. கடந்த ஒரு வருசமா திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியோட மருத்துவ கழிவுகளையெல்லாம் எங்க ஊர்ல வந்துதான் கொட்டுறாங்க. இந்த கழிவுகளால எங்க உயிருக்கே ஆபத்து இருக்கு. திருவாரூர் ஆஸ்பத்திரியில நோயாளிக்கு பயன்படுத்தின ஊசி, சிரஞ்ச், குளுக்கோஸ் பாட்டில்கள், டாக்டருங்க கையிலை மாட்டுற உறை அப்புடின்னு பல மாதிரியான கழிவுகளும் இந்த குப்ப மேட்டில் கெடக்குது. சில நேரத்துல ரத்தக்கறையோட உள்ள பஞ்சு, ரத்த டெஸ்ட் எடுக்க பயன்படுத்தின பொருட்களெல்லாம் இங்க கெடக்கும்.
அதையெல்லாம் பார்க்கவே ரொம்ப அருவருப்பாவும் பயமாவும் இருக்கும். நேரம் ஆக ஆக அந்த வாட எங்க ஊர் முழுக்க பரவிடும். இந்த ஆஸ்பத்திரி கழிவுல இருந்து வீசுற நாத்தத்துனலா எங்க ஊர்ல பல பேருக்குத் தலைவலியும் சுவாச பிரச்னையும் கூட ஏற்பட்டிருக்கு. எங்களால நிம்மதியா ஒரு வாய் சோறு கூட சாப்பிட முடியாது. அந்த அளவுக்கு, இந்த கழிவுகளால நாற்றம் அடிக்கும். சில சமயத்துல இங்க குப்பை ரொம்ப அதிகமா சேர்ந்திட்டா யாராவது வந்து இந்த குப்பைய கொளுத்திவிட்டுட்டு போயிடுவாங்க. அப்போ பெரிய மலை அளவுக்குப் புகை எங்க ஊரையே சூழ்ந்திடும்.
அந்த சமயத்தில் நாங்க மூச்சு விடுறதே கஷ்டமா இருக்கும். சின்ன சின்ன பசங்களெல்லாம் ரொம்ப சிரம படுவாங்க. இந்த மருத்துவ கழிவால நாங்க தெனம் தெனம் செத்துப் பொழச்சு தான் இந்த ஊர்ல வாழ்ந்துகிட்டு இருக்கிறோம். 12 வருஷத்துக்கு முன்னாடி கலைஞர் ஐயாவால எங்க ஊர்ல ஆஸ்பத்திரி வந்தப்போ நாங்க எல்லாரும் ரொம்ப பெருமைப் பட்டோம். ஆனா, இப்ப அந்த ஆஸ்பத்திரியாலேயே நாங்க சாவுற நிலமை உருவாகுமென்று நாங்க யாருமே கனவுல கூட நெனைக்கல. எவ்வளவோ முறை சொல்லியும் அதிகாரி யாருமே நடவடிக்கை எடுப்பதில்லை. தமிழக முதல்வர் தான் எங்க பிரச்னைக்கு நிரந்தர தீர்வா இந்த ஆஸ்பத்திரி கழிவுகளை இங்கே கொட்டாம அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறார்கள்” வேதனையோடு.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய தண்டலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன், “நான் இந்த கிராமத்துல 15 வருஷமா விவசாயம் பண்ணிட்டு வருகிறேன். இந்த ஆஸ்பத்திரி குப்பைகளை எங்க ஊர்ல கொட்டுறதுனால எங்க உயிருக்கே ரொம்ப ஆபத்தா இருக்குது. இந்த கிராமத்தில் இருக்கிற ஆடு, மாடுயெல்லாம் அந்த குப்பைமேட்டில் போய் தான் மேய்யுது..! அப்போது அந்த குப்பையில் கெடக்கிற பழைய ஊசி, சிரஞ்ஜி மாறியான பொருட்கள், மாட்டுடைய காலில் குத்தி பெரிய புண்ணாகிடுது. அதுக்கு பிறகு அந்த மாடு நடக்கவே ரொம்ப கஷ்ட படும். இதனால, சில மாடு செத்துக் கூடப் போய் இருக்கு. அந்த ஆஸ்பத்திரிக் குப்பையிலிருந்து ரத்த வாடை அடிக்கிறதுனால நாய்களெல்லாம் அந்த குப்பையை கிளறி ரத்தகறை படிந்த பொருட்களையெல்லாம் இழுத்துகிட்டு வந்து எங்க வீடுகளுக்கு பக்கத்தில் போட்டுடுது. பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகளான அந்த பொருளையெல்லாம் பார்க்கவே ரொம்ப பயமா இருக்கும். தயவுசெய்து அரசாங்கம் இந்த குப்பைகளை எங்கள் கிராமத்தில் கொட்டாமல் வேறு எங்காவது கொட்டவேண்டும்” என்கிறார் அவர்.
இது விவகாரம் குறித்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜாவிடம் நேரில் சென்று கேட்ட போது, “திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையுள்ள கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியை ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளோம். தினமும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த நபர்கள் மருத்துவமனைக்கு வந்து, மருத்துவக்கழிவுகளை தரம் பிரித்து அள்ளி செல்வார்கள். அவர்கள் அந்த குப்பைகளை எங்குச் சென்று வீசுகிறார்கள் என்று எங்களுக்குத் தெரியாது” என்றார்.
மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களால் கொண்டுவரப்பட்ட, திருவாரூர் அரசு பொது மருத்துவமனையாலேயே அப்பகுதி மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என கலங்குகிறார்கள் மக்கள். அத்தோடு, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் நம்புகிறார்கள்!