புதுடெல்லி: எல்ஐசி பங்குகளை வாங்கி பெரு முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளனர். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதில் பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய மற்றும் உலகின் 5வது பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை விற்று நிதி திரட்ட முடிவு செய்தது. முதற்கட்டமாக 5 சதவீத பங்குகளை விற்க முடிவு செய்து, இதற்கான வரைவு அறிக்கையை செபியிடம் ஒன்றிய அரசு தாக்கல் செய்தது. இந்நிலையில், உக்ரைன் போர், மீண்டும் கொரோனா பரவல் காரணமாக பங்குச்சந்தையில் ஸ்திரத்தன்மையன்ற நிலை காணப்படுவதால், 3.5 சதவீத பங்குகளுக்கான ஐபிஓ-க்களை மட்டுமே வெளியிடுவது என, கடந்த மாத இறுதியில் முடிவு செய்யப்பட்டது.பொது மக்கள், சிறு முதலீட்டாளர்களுக்கான ஐபிஓ வெளியீடு நாளை துவங்க உள்ள நிலையில், பெரு முதலீட்டாளர்களுக்கான ஐபிஓக்கள் நேற்று வெளியிடப்பட்டன. இவர்களுக்கு ரூ.5,630 கோடிக்கு பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. ஆனால், இதற்கும் மேல் அதிக அளவில் விண்ணப்பங்கள் குவிந்ததாகவும், சிங்கப்பூர், நார்வே நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம் காட்டியதாகவும் பங்குச்சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.