பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெல்காம், பீதர், கார்வார் உள்ளிட்ட மகாராஷ்டிர எல்லையோர மாவட்டங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் கணிசமாக வசிக்கின்றனர். இதனால் எல்லையோரத்தில் உள்ள 800 கிராமங்களை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என மராத்திய அமைப்பினர் கோரி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர துணைமுதல்வர் அஜித் பவார், ‘‘மகாராஷ்டிரா தனி மாநிலமாக உருவாகி 62 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பீதர், பெலகாவி போன்ற மாவட்டங்களை நாம் இழந்தது வருத்தம் அளிக்கிறது. 1956 மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின் போது கர்நாடகாவுடன் சேர்க்கப்பட்ட அந்த மாவட்டங்களில் இப்போதும் மராத்தி மொழியே பேசப்படுகிறது.
வேறு சில இடங்களிலும் மராத்தியர்கள் அதிகமான எண்ணிக்கையில் வசிக்கிறார்கள். அந்த மக்கள்மகாராஷ்டிராவுடன் தங்களை சேர்க்க வேண்டும் என போராடி வருகிறார்கள். அவர்களின் கோரிக்கை ஏற்கப்படும் வரை மராத்திய அமைப்புகளுக்கு மகாராஷ்டிர அரசு துணையாக இருக்கும்” என்றார்.
இந்த பேச்சுக்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். பெலகாவி, தார்வாட், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் உருவ பொம்மையை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறும்போது, ‘‘மகாராஷ்டிர அரசியல்வாதிகள் தங்களின் சுய லாபத்துக்காக மொழி பிரச்சினை, எல்லைப் பிரச்சினையை தூண்டிவிடுகின்றனர். எத்தனை ஆண்டுகள் அவர்கள் புலம்பினாலும் ஒரு அங்குலம் நிலம் கூட நாங்கள் வழங்க மாட்டோம் என அவர்களுக்கு தெரியும்’’ என்று திட்டவட்டமாக கூறினார்.