சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் புகுந்து தேதி முத்திரையை திருடிய முன்னாள் உதவியாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை எழும்பூர் 6-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றி வருபவர் மதுரவல்லி. நேற்று மதுரவல்லி தனது மேஜை மீது வைத்திருந்த தேதி முத்திரையைக் காணவில்லை என பல இடங்களில் தேடிய போதும் கிடைக்கவில்லை. இதனால், நீதிமன்றத்திற்குள் இருந்த சி.சி.டி.வி பதிவுகளை அவர் ஆய்வு செய்தபோது ஒரு நபர் நீதிமன்றத்திற்குள் புகுந்து தேதி முத்திரையைத் திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து தேதி முத்திரையைத் திருடிய நபர் மீது எழும்பூர் காவல் நிலையத்தில் மதுரவல்லி புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர். பின்னர் அந்த நபரிடம் விசாரணை நடத்திய போது, அவர் சைதாப்பேட்டை தடந்தர் நகரைச் சேர்ந்த விவேகானந்தன்(48) என்பதும், அவர் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் எழும்பூர் நீதிமன்றத்தில் உதவியாளராக பணிப்புரிந்து வந்ததும் தெரியவந்தது. மேலும், கடந்த மாதம் நீதிமன்றத்திற்குச் சொந்தமான மதுபாட்டிலை திருடியதற்காக விவேகானந்தன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. விசாரணையில் நேற்று நீதிமன்றத்திற்குள் புகுந்து தேதி முத்திரையையும் திருடியதாக விவேகானந்தன் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.
மேலும், எழும்பூர் நீதிமன்றத்தில் பணிப்புரியக்கூடிய இரு வழக்கறிஞர்கள் தன்னிடம் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட மேஜிஸ்ட்ரேட் ஒருவரின் பெஞ்சில் இருந்து தேதி முத்திரையை திருடக் கூறியதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அந்த வழக்கறிஞர்களை பிடித்து விசாரணை நடத்திய போது சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட மேஜிஸ்ட்ரேட்டின் கையெழுத்தை போலியாக பதிவிட்டு, தேதி முத்திரையை திருடி affidavit சமர்ப்பிக்க இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து விவேகானந்தன் மீது திருட்டு உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடப்பட்ட தேதி முத்திரையை அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர்.
பின்னர் விவேகானந்தனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை நீதிமன்ற உத்தவுப்படி சிறையில் அடைத்தனர். முத்திரையை திருட தெரிவித்த இரு வழக்கறிஞர்கள் அவரின் உதவியாளர் ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM