ஐரோப்பாவில் சுற்றுப்பயணம்… யார் யாரைச் சந்தித்தார் பிரதமர் மோடி?

ஸ்வீடன், டென்மார்க், ஐஸ்லாந்து, ஃபின்லாந்து மற்றும் நார்வே உள்ளிட்ட நார்டிக் நாடுகள் இந்தியாவுடன் முதலீடு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் இரண்டாவது கட்டமாக செவ்வாய்க்கிழமை டென்மார்க் நாட்டில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைகளில் தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், தகவல்-தொழில்நுட்பம், ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என மோடி வலியுறுத்தியுள்ளார்.
டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹெகனில் அந்நாட்டு பிரதமர் மெட்டே பிரெடரிக்சென் உள்ளிட்டோரை மோடி சந்தித்தார். டென்மார்க் பிரதமருடன் ஆலோசனைகளில் பங்கேற்கும் மோடி, இரண்டாவது இந்தியா-நோர்டிக் உச்சிமாநாட்டிலும் கலந்து கொள்கிறார். இந்த உச்சிமாகாநாட்டில் ஸ்வீடன், நார்வே, டென்மார்க், பின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் நிலையில், வடக்கு ஐரோப்பாவில் உள்ள இந்த பிராந்தியதிலிருந்து கணிசமான முதலீடுகள் மற்றும் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு வரவேண்டும் என பிரதமர் வலியுறுத்தி வருகிறார்.
2018-ல் நடைபெற்ற முதலாவது இந்தியா- நோர்டிக் உச்சி மாநாட்டுக்குப் பிந்தைய நிலை குறித்து இந்த மகாநாட்டில் ஆலோசனை நடைபெற்றது. இந்த உச்சி மாநாடு, பெருந்தொற்றுக்கு பிந்தைய பொருளாதார மீட்டுருவாக்கம், பருவநிலை மாற்றம், புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இந்தியா-நோர்டிக் ஒத்துழைப்பால் ஆர்டிக் பிராந்தியத்தில் நிலவும் உலக பாதுகாப்பு சூழல் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தும்.
image
உக்ரைன் நாட்டில் போர் மூண்டப் பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி, ஐரோப்பா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கோபன்ஹெகன் நகரில் பிரதமர் பிரெடரிக்செனுடன் இருதரப்பு உறவுகள் குறித்து மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். டென்மார்க்குடனான தனித்துவமான “பசுமை பாதுகாப்பு கூட்டாண்மை” மற்றும் இதர இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய இது மோடிக்கு வாய்ப்பாக அமையும்.
டென்மார்க் நாடு ராணி மார்கரெட் அளித்த விருந்தில் கலந்து கொண்ட மோடி, ராணியை சந்தித்து பேசினார். இந்தியா-டென்மார்க் வர்த்தக வட்டமேஜை நிகழ்ச்சியில், பிரதமர் டென்மார்க்கில் உள்ள இந்திய சமுதாயத்தினர் இடையே கலந்துரையாடல் நடைபெற்றது. முன்னதாக பிரதமர் மோடி தனது மூன்று நாள் ஐரோப்பா சுற்றுப்பயணத்தை ஜெர்மனி நாட்டில் தொடங்கினார். உக்ரைன்-ரஷ்யா போரினால் யாருக்கு பலன் இல்லை இன்று இந்தியா அமைதியை விரும்புவதாகவும் மோடி வலியுறுத்தினார்.
திங்கள்கிழமை ஜெர்மனி சென்றடைந்த பிரதமர் மோடி, பெர்லின் நகரில் ஜெர்மனியின் பிரதமர் ஓலப் ஸ்கோல்ஸ் உள்ளிட்டோரை சந்தித்தார். மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர் மற்றும் நிர்மலா சீதாராமன் பிரதமருடன் ஆலோசனைகளில் பங்கேற்றனர்.
image
தனது ஐரோப்பா சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக, பாரிசில் பிரதமர் மோடி பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோனை சந்திக்கிறார். சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற தேர்தலில், இமானுவேல் மாக்ரோன் மீண்டும் வெற்றிபெற்றிருப்பது மற்றும் பிரதமர் மோடி ஏற்கெனவே அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா-பிரான்ஸ் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் தொனியை மோடி-மக்ரோன் சந்திப்பு உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வருடம் முதல் முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் மோடி, உக்ரைன்-ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியாவை ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா நிர்பந்தம் செய்யக்கூடாது என மோடி சூசகமாக தெரிவித்து வருகிறார். போர் சூழலையும் தண்டி ஐரோப்பா-இந்தியா உறவு வலுப்பெறும் நிலையை உருவாக்க மோடி முயற்சி செய்து வருகிறார். கோவிட் பாதிப்புக்கு பிறகு இந்திய கூடுதல் முதலீடுகள் மற்றும் வணிகம் மூலம் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என மோடி வலியுறுத்தி வருகிறார்.
– கணபதிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.