சென்னை: தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் வழக்கமான நடைமுறைகளையே பின்பற்ற வேண்டும் என்று அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் டீன்களுக்கு கடந்த பிப்ரவரி 10-ம் தேதியே சுகாதாரத் துறை செயலாளர் வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு கூறியுள்ளார்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களால் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஏற்கப்பட்ட சமஸ்கிருதம் உறுதிமொழி விவகாரம் தொடர்பாக, காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட டீன் ரத்னவேல், மாணவர் சங்க பிரதிநிதள், பொறுப்பு டீன் ஆகியோரிடம் மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு இன்று (மே 3) விசாரணை நடத்தினார்.
இதன் பின்னர், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, செய்தியாளர்களிடம் கூறியது: “வெள்ளை அங்கி அணிவிக்கும் (White Coat Ceremony) நிகழ்வில் நடந்த சம்பவம். அதாவது பாரம்பரியமாக நாம் ஹிப்போகிரடிக் உறுதிமொழிதான் எடுப்போம். அந்த உறுதிமொழிதான் காலங்காலமாக எடுத்துவருவது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஹிப்போகிரடிக் உறுதிமொழிதான் எடுத்து வருகிறோம். இந்தமுறை மதுரையில் தவறுதலாக மகரிஷி சரக் சப்தா என்ற உறுதிமொழி மாற்றி எடுக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர் சங்கப் பிரதிநிகள் தவறுதலாக பதிவிறக்கம் செய்ததாக கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக டீன் ரத்னவேலுவிடம் விசாரணை நடத்தப்பட்டது. தேசிய மருத்துவ ஆணையத்திடமிருந்து வந்தது ஒரு சுற்றறிக்கைதான், அது உத்தரவு அல்ல. ஆனால், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பிப்.10-ம் தேதியே அனைத்து மருத்துவக் கல்லூரி தலைவர்களுக்கும் தெளிவான வழிகாட்டுதல்களை கொடுத்துவிட்டார். எம்சிஐ, என்எம்சிஐ பெயரிலேயே நிறைய போலியான தகவல்கள் பரவி வருவதால், உரிய அங்கீகாரமில்லாமல் வரும் சுற்றறிக்கைகள் குறித்து டீன்கள் சுகாதாரத் துறையிடம் உரிய விளக்கம் பெற்று, தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த தகவல்கள் அனைத்து டீன்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ரத்னவேலும் அதனை பார்த்துவிட்டு, ‘நோட்டட் சார்’ என பதில் அனுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து பிப்.11-ம் தேதி மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் சார்பில், அனைத்து டீன்களுக்கும் ஓர் அறிவிப்பு கொடுத்தோம். அதில், அனைத்து டீன்களும், காலம்காலமாக மாணவர் சேர்க்கைக்கு என்ன வழிமுறைகளைப் பின்பற்றுவோமா அதனை பின்பற்ற வேண்டும்.
கரோனா காலம் என்பதால், மிகப் பெரிய கூடுகை, நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது. வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி போன்றவைகளை நடத்துவதாக இருந்தால், சுகாதாரத் துறை மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் அனுமதி பெற்று நடத்த வேண்டும் என அறிவுத்தியிருந்தோம். இதுதொடர்பாகவும் இன்றைய விசாரணையில் கேட்டோம்.
பொதுவாக, மருத்துவ மாணவர்கள் சேர்க்கை பிப்ரவரி 14 முதலே தொடங்கிவிட்டது. இதுதொடர்பான கேள்வி நாடாளுமன்றத்தில் வந்தபோது, ஹிப்போகிரடிக் உறுதிமொழியை மாற்ற வேண்டியது இல்லை என்ற பதிலும் எங்களுக்கு கிடைத்துள்ளது. எனவே, இந்த சுற்றறிக்கை குறித்து உரிய விளக்கம் பெற்று நடத்தியிருக்க வேண்டும். ஆனால், இங்கு ஒரு தவறு நடந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. மாணவர்கள் ஒப்புக் கொண்டனர். தாங்கள் தவறுதலாக செய்துவிட்டதாக கூறியுள்ளனர். டீனுக்கு அன்றைய அவசரத்தில் அதனை காண்பதற்கு உரிய நேரம் கிடைக்கவில்லை. எனவே, இந்த விசாரணை குறித்த விவரங்கள் அரசின் கவனத்துக்கு நிச்சயம் கொண்டு செல்லப்படும். மேலும் இந்த விவகாரத்தில் முதற்கட்ட விசாரணை நடத்தியுள்ளோம், தேவைப்பட்டால் அடுத்தக்கட்ட விசாரணை நடத்துவோம்” என்று அவர் கூறினார்.