வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை : மசூதிகளில் ஒலி பெருக்கிகளை அகற்றும் விவகாரத்தில் மஹாராஷ்டிரா நவ நிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே மீது மும்பை போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த பேரணியில் பேசிய மஹாராஷ்டிரா நவ நிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே, மசூதிகளில் மாட்டியிருக்கும் ஒலிபெருக்கிகளை மே 3-ம் தேதிக்குள் அகற்றாவிட்டால் அதன்பின்னர் நடக்கும் சம்பவங்களுக்கு நான் பொறுப்பாக மாட்டேன், ஒலிபெருக்கி சத்தம் ஒரு மதப் பிரச்சினை அல்ல, சமூகப் பிரச்னை என பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், ராஜ் தாக்கரே விதித்த காலக்கெடு இன்று (மே.03) முடிவடையும் நிலையில், மாநில டிஜிபி ரஜ்னிஷ் சேத், அம்மாநில உள்துறை மந்திரி திலீப் வால்ஸ் பாட்டீலை இன்று காலை சந்தித்தார். இருவரும், மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து, சட்டம்-ஒழுங்கு நிலைமை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ராஜ் தாக்கரே மீது போலீசார் எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
ராஜ்தாக்கரே வீடு முன் போலீஸ் குவிப்பு
இதற்கிடையே இன்று மாலை ராஜ்தாக்ரே வீடு முன் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால், அவர் கைதாகலாம் என கூறப்படுவதால் அங்கு பதற்றம் காணப்படுகிறது.
Advertisement