பாட்னா: தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் புதிய அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரசாந்த் கிஷோரின் ஐபேக்நிறுவனம் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்து வருகிறது. கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளுக்காக வியூகம் வகுத்துக் கொடுத்ததில் அக்கட்சிகள் வெற்றி பெற்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்புகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரை பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசினார். அடுத்து வரும் குஜராத் பேரவைத்தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக சில ஆலோசனைகளை அவர் வழங்கியதாக தகவல் வெளியானது. மேலும் அக்கட்சியில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதனிடையே, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசினார். அப்போது அடுத்து ஆண்டு நடைபெறவுள்ள தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரசேகர் ராவின் டிஆர்எஸ் கட்சிக்கு வியூகம் அமைத்துக் கொடுப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே, காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து விட்டதாகபிரசாந்த் கிஷோர் அதிகாரப்பூர்வ மாக அறிவித்து விட்டார்.
இந்நிலையில், அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள பங்கேற்பாளராக இருப்பதற்கும் மக்கள் நலன் சார்ந்த கொள்கையை வடிவமைக்க உதவுவதற்குமான எனது தேடலாலனது 10 வருட ரோலர்கோஸ்டர் சவாரிக்கு வழிவகுத்தது. நான் எனது பக்கத்தைத் திருப்பும்போது, உண்மையான மாஸ்டர்களிடம் (மக்கள்) செல்வதற்கும் நல்லாட்சி என்றமுழக்கத்துடன் மக்கள் பிரச்சினைகள் மற்றும் பாதையை புரிந்து கொள்வதற்கும் இதுதான் சரியான நேரம் என கருதுகிறேன். இது பிஹாரில் இருந்து தொடங்கும்’’ என பதிவிட்டுள்ளார்.
பத்திரிகையாளர் சந்திப்பு
பிரசாந்த் கிஷோர் வரும் 5-ம் தேதி பத்திரிகையாளர்களை சந்திக்க இருப்பதாகவும் அப்போதுதனது அரசியல் பிரவேசம் குறித்துஅறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு வங்கம், தமிழ்நாடுஉள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த ஆண்டு மே 2-ம் தேதி வெளியானது. அன்றைய தினம், தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்கும் பணியில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடப் போவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்தார்.
இவ்வாறு அவர் தெரிவித்து சரியாக நேற்றுடன் ஓராண்டு முடிந்த நிலையில், அரசியல் கட்சி தொடங்கப் போவதாக மீண்டும் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.