புதுடில்லி :”குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தை நிறைவேற்றுவதில் அமெரிக்காவை விட இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது,” என, நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தீர்மானங்கள்
குழந்தை தொழிலாளர்களுக்கு எதிராக போராடி வரும் கைலாஷ் சத்யார்த்தி, கூறியதாவது:பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களை அமல்படுத்தியுள்ளது. அத்துடன் குழந்தை தொழிலாளர்களுக்கு வயது வரம்பையும் நிர்ணயித்துள்ளது. இதன்படி, இந்தியாவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தொழிலில் அமர்த்த தடை உள்ளது. ஆபத்தான தொழில்களில், 18 வயதுக்குட்பட்டோரை பணியில் அமர்த்தவும் தடை விதிக்கப்பட்டுஉள்ளது.ஆனால் அமெரிக்கா, தொழிலாளர் மாநாட்டு தீர்மானத்தை இன்னும் நிறைவேற்றாமல் உள்ளது.
தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச வயதையும் நிர்ணயிக்காமல் உள்ளது. இந்த வகையில், குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில், அமெரிக்காவை விட இந்தியா சிறப்பாக செயல்படுகிறது.இந்தியா, 2047ல் 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, கடைசி குழந்தைக்கும் சுதந்திரம், பாதுகாப்பு, கல்வி ஆகியவை கிடைக்கும்.
வாய்ப்பு
அதற்கு முன்னதாகவே இந்த நிலை ஏற்படும் என நம்புகிறேன்.பீஹார், உ.பி., அல்லது தென் மாநிலங்களில் உள்ள குக்கிராமங்களில், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள ஒரு பெண் குழந்தை கல்வி கற்கவும், தன் கனவுகளை நனவாக்கவும் வாய்ப்புகளை பெற வேண்டும். அப்போது தான் இந்தியா முழுமையாக சுதந்திரம் பெற்றதாக கருதப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement