கோடைகால வெப்பத்தின் தாக்கத்தால், வீட்டு பயன்பாட்டு ஏசிக்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் வோல்டாஸ், ஹிட்டாச்சி, எல்.ஜி உள்ளிட்ட நிறுவனங்களின் ஏ.சி.க்கள் அதிக அளவு விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்தாண்டு விற்பனை குறைந்த நிலையில் இந்த ஆண்டு ஏ.சி விற்பனை, கொரோனா பரவலுக்கு முன் இருந்த அளவை எட்டியிருப்பதாக தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பேசிய வோல்டாஸ் நிர்வாக இயக்குனர் பிரதீப் பக்ஷி, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஏ.சி தொழில்துறை அதிக வளர்ச்சியைக் கண்டுள்ளதாகவும், கடந்த ஒரே மாதத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக ஏ.சிக்களை விற்பனையாகி உள்ளதாகவும் கூறினார்.
அதேபோன்று கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஏ.சி விற்பனை 67 சதவீதம் அதிகரித்துள்ளதாக பானசோனிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதே போல ஏ.சி விற்பனை இருமடங்கு அதிகரித்துள்ளதாக ஹிட்டாச்சி நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், ஹையர், எல்.ஜி உள்ளிட்ட நிறுவனங்களும் ஏ.சி விற்பனை எதிர்பார்த்ததை விட அதிகரித்திருப்பதாக கூறியுள்ளன.