தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் வெளி மாநிலங்களில் நடத்தப்படுவதால், தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்களுக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுவதால், படிப்பிடிப்பை தமிழகத்திலேயே நடத்த வேண்டும் என்று பெப்சி சங்கத் தலைவர் ஆர்.கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், தங்கள் கோரிக்கையை விஜய் ஏற்றுக்கொண்டதாகவும் அதே போல, அஜித் அவருடைய திரைப்படங்களின் படப்பிடிப்பு சென்னையிலேயே நடத்த வேண்டும் என்று ஆர்.கே. செல்வமணி நேரடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு படத்தை தயாரிக்கும் போது அதில் பணியாற்ற பெப்சி (FEFSI) ஊழியர்களை படத் தயாரிப்பாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் பெப்சிக்கும் இடையில் ஏற்கனவே ஒப்பந்தம் இருந்தது. பெப்சி சங்கத்தினர் ஊதிய உயர்வு கேட்டு தயாரிப்பாளர் சங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பெப்சி சங்கத் தலைவர் ஆர்.கே. செல்வமணி ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக அறிவித்தார்.
24 சங்கங்களை உள்ளடக்கிய பெப்சி ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை இன்னும் இறுதி முடிவை எட்டாத நிலையில், ஆர்.கே. செல்வமணி தன்னிச்சையாக அறிவித்திருப்பது ஏற்புடையது இல்லை என திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை மே 2 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் செயற்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் மே 2 ஆம் தேதி கலந்து கொண்டு அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ‘தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்திற்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் காலங்காலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்டது.
ஆனால், அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை அவமதிக்கும் விதமாக பெப்சி செயல்பட்டதால் இந்த ஒப்பந்தம் 02.05.2022 முதல் ரத்து செய்யப்படுகிறது என அந்த செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தங்களுக்கு தேவையான வேலையாட்கள் யாரை வேண்டுமானாலும் வைத்து படப்பிடிப்பு பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், திரைப்பட தொழிலாளர்கள் சங்கமான பெப்சி சங்கத் தலைவர் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி, சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, பெப்சி சங்கத் தலைவர் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி கூறியதாவது: வருகிற 8 ஆம் தேதி நடிகர் சங்க பொதுக்குழு நடைபெற உள்ளது. அதனால், அன்றைக்கு அனைவரும் பொதுக்குழுவில் கலந்துகொள்ள வேண்டும் என்பதால் அன்றைக்கு படப்பிடிப்புகளை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் சங்கத்தில் இருந்து வேண்டுகொள் விடுத்து இருந்தார்கள். அதன்படி, மே 8 ஆம் தேதி படப்பிடிப்பு இல்லை என்று முடிவெடுத்துள்ளோம். இரண்டாவது தயாரிப்பாளர் சங்கத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக கடிதம் அனுப்பியுள்ளதாகக் கூறினார்கள். ஆனால், அது போன்ற எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளியை தொடர்புகொண்டு கேட்டேன். அவர் அதுபோல முடிவு எதுவும் எடுக்கவில்லை என்று கூறினார். நாளை காலை இரண்டு அமைப்புகளையும் பேசி முடிவெடுக்கலாம். அதுவரை நீங்கள் எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தயாரிப்பாளர் சங்கத்தின் கடிதம் வராததாலும், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் வேண்டுகோள் விடுத்ததாலும் அந்த கடிதம் தொடர்பாக நாங்கள் மேலதிக நடவடிக்கை எடுப்பதில்லை என்று முடிவு செய்துள்ளோம். நாளை காலை இரண்டு அமைப்புகளையும் பேசி முடிவெடுக்கலாம் என்று கூறியுள்ளார்கள். அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம் இரு தரப்பினருக்கும் இடையே புரிதலின்மைதான் காரணம்.” என்று கூறினார்.
அப்போது, செய்தியாளர்கள், தொழிலாளர்களை மீறி இங்கு தயாரிப்பாளர்கள் முடிவு எடுக்க முடியும் என்பது சாத்தியமா என்ற கேட்டதற்கு, “எப்பொழுதும் பணிவாகவும் நட்பாகவும் போவதில் எங்களுக்கு பிரச்னையில்லை. நாங்கள் வலிமையாக இருக்கிறோம் என்பதற்காக அவர்களை அடிக்கவோ அவமானப்படுத்தவோ விரும்பவில்லை. நாங்கள் அனைவரும் ஒரே துறையை சார்ந்தவர்கள். நாளை இணைந்து பணியாற்றும் போது இந்த பிரச்னையால் தேவையில்லாத மனக்குறை வேண்டாம் என்பதை கவனத்தில் வைத்துள்ளோம்” என்று கூறினார்.
அப்போது, தமிழ் சினிமாவில் கதாநாயகர்களாக நடிப்பவர்களை ஹீரோவாக உருவாக்கியது தமிழ்நாடுதான். ஆனால், அவர்களின் சினிமா படப்பிடிப்புகள் தொடர்ச்சியாக வெளி மாநிலங்களுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இதனால், தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், இது தொடர்பாக நீங்கள் கோரிக்கை வைப்பதாக சொல்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த இயக்குனர் ஆர்.கே. செல்வமணி, ““இது குறித்து விஜய் சாருக்கு ஒரு விளக்கம் கூறினோம். உடனடியாக அவர் நடவடிக்கை எடுத்து அவருடைய படப்பிடிப்பை இங்கே வைத்துக்கொள்ள கூறினார். ரஜினி சாருக்கு சொன்னோம். அவர் காலா படத்தின் செட்டை இங்கே போட சொன்னார்கள். சில நேரங்களில் என்னாகிறது என்றால், அவர்களுக்கு தேவையான பிரம்மாண்ட ஃப்லூர்ஸ் இங்கே இல்லை. அதனால், இங்கே இல்லாததால், அவர்களை இங்கேயே செய்யுங்கள் என்று சொல்ல முடியாது. அந்த மாதிரி சில நேரங்களில் வெளி மாநிலங்களுக்கு சென்று படப்பிடிப்பு நடத்தினால் பரவாயில்லை. ஆனால், தொடர்ச்சியாக, வெளிமாநிலங்களுக்கு செல்வது சரியான முறை அல்ல. வெளி மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்துவதால், திரைப்பட தொழிலாளர்கள் பொருள் இழப்புக்கு ஆளாகிறார்கள். வருமானத்தை இழந்து நஷ்டப்படுகிறார்கள். இப்போது அஜித் படம் தொடங்க உள்ளதால், அஜித்துக்கு இதன் மூலம் நேரடியாக வேண்டுகோள் வைக்க விரும்புகிறோம். இதுவரை நாங்கள் திரைப்பட இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும்தான் வேண்டுகோள் வைத்திருந்தோம். இப்போது அஜித்துக்கு நீங்கள் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்துவதால் இங்கு பல தொழிலாளர்கள் நஷ்டம் அடைந்திருக்கிறார்கள். சென்னையிலேயே படப்பிடிப்புகளை நடத்த வேண்டும்” என அஜித், தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ஹெச்.வினோத்திடம் கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து பேசிய பெப்சி சங்கத் தலைவர் ஆர்.கே. செல்வமணி, “விஜய்யின் இப்போது எடுக்கப்படும் படம் இருமொழி படம் என்பதால் அங்கே போவதை தவிர்க்க முடியாது. ஆனால், அதற்கு ஏற்றாற் போல அடுத்த படத்தில் இங்கு சென்னையில் படப்பிடிப்பு வைத்து பணியாளர்களின் நலனுக்கு செய்து கொடுப்பார். நாங்களும் இங்கேதான் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என சொல்லவில்லை. ஆனால், தொடர்ச்சியாக வெளி மாநிலத்தில் படப்பிடிப்பு நடத்துவது ஏற்புடையதல்ல. நம் சென்னையிலேயே செட் அமைப்பதற்கான அனைத்து இடங்களும் பாதுகாப்பாக உள்ளது.
தென்னிந்திய மொழிகளில் ஒப்பிடும் போது 10% வரை சம்பளம் முன் பின் இருக்கும். இந்த ஊதிய உயர்வு பிரச்னையும் பேசி முடித்துள்ளோம். தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் எங்களுக்கும் மன பிரச்னை தானே தவிர பண பிரச்னை இல்லை” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“