கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கேஸ் சிலிண்டர் வெடித்த தீ விபத்தில் 3 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது.
நயினாகுப்பம் கிராமத்தில் மணிகண்டன் என்பவரது தாய், சமையல் செய்வதற்காக அடுப்பை பற்ற வைத்த போது திடீரென கேஸ் சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் குழாய் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவர் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த நிலையில், பயங்கர சத்தத்துடன் கேஸ் சிலிண்டர் வெடித்து குடிசை தீப்பிடித்து எரியத் தொடங்கியது. 20 அடி உயரத்திற்கு கொளுந்து விட்டு எரிந்த தீயானது அருகில் இருந்த 2 குடிசை வீடுகளுக்கும் பரவியது.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட போது மற்றொரு வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரும் வெடித்தது. இருப்பினும் தீயணைப்புத்துறையினரின் துரித நடவடிக்கையால் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் உயிர்சேதம் ஏற்படவில்லை.