திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதான சரியா நாயரின் பாலியல் புகார் தொடர்பாக, கேரளா முதல்வர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை திடீரென சோதனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகம், கேரளாவில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சோலார் பேனல் மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக எழுந்த புகாரில், செங்கனூரை சேர்ந்த சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அப்போதைய முதல்வர் உம்மன்சாண்டி உள்பட அவரது அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்பட 6 பேர், தன்னை பலாத்காரம் செய்ததாக சரிதாநாயர் புகார் கூறியது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உம்மன்சாண்டி, அவரது அரசு இல்லத்தில் வைத்து, தன்னை பலாத்காரம் செய்ததாக சரிதா நாயர் புகாரில் கூறி இருந்தார். அதன் பிறகு பினராயி விஜயன் அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த சம்பவம் தொடர்பாக குற்றப் பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதில் உம்மன்சாண்டி மீது கூறப்பட்ட புகாரில் உண்மையில்லை என்பது தெரியவந்தது. சம்பவம் நடந்த நாளன்று உம்மன்சாண்டி வீட்டில் இல்லை என்றும் குற்றப்பிரிவு போலீசார் கூறினர். இதையடுத்து உம்மன்சாண்டி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரி, முதல்வர் பினராயி விஜயனிடம் சரிதாநாயர் புகார் கொடுத்தார். இதையடுத்து கடந்தாண்டு, இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து சரிதாநாயர் கொடுத்த புகார் தொடர்பாக சிபிஐ 6 வழக்குகள் பதிவு செய்தது. இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள், இன்று காலை திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் தங்கியுள்ள அரசு வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சரிதா நாயரும் உடன் வந்திருந்தார். முதல்வர் பினராயி விஜயன் சிகிச்சைக்காக மனைவியுடன் அமெரிக்கா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.