சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்தது. அங்கு ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தது.
இந்தநிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் மீது நடவடிக்கை எடுக்குமாறு அம்மாநில பொறுப்பாளர் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதி உள்ளார்.
பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஷ் சவுத்ரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் நவம்பர் முதல் தற்போது வரை பஞ்சாப்பில் கட்சியின் விவகாரங்களுக்கு பொறுப்பாளராக இருந்து வரும் சித்து, காங்கிரஸ் அரசின் செயல்பாட்டை தொடர்ந்து விமர்சித்து ஊழல் நிறைந்தது என்றும் ஷிரோமணி அகாலி தளத்துடன் கைகோர்த்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கட்சி, தேர்தலில் போட்டியிலும் நிலையில் சித்து இதுபோன்று செயல்படுவது பொருத்தமற்றது. இவ்வாறு செயல்படுவதை தவிர்க்குமாறு நான் அவரிடம் பலமுறை அறிவுறுத்திய போதிலும் அவர் தொடர்ந்து அரசுக்கு எதிராக பேசி வந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ஹரிஷ் சவுத்ரி கூறும்போது, சித்துவின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து புதிய பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் ராஜா வார்ரிங்குக்கு விரிவான குறிப்பை அனுப்பி உள்ளேன். சித்து, தன்னை கட்சிக்கு மேல் காட்டிக்கொள்ள அனுமதிக்க முடியாது. கட்சியின் ஒழுக்கத்தை மீறுபவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க முடியாது.
அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை ஏன் எடுக்க கூடாது என்று சித்துவிடம் விளக்கம் கேட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது’ என்றார்.
சட்டசபை தேர்தலுக்கு முன்பு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத்சிங் சித்து நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கும் முதல் மந்திரியாக இருந்த அம்ரீந்தர் சிங்குக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
ஆனால் அம்ரீந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.