சென்னை: சிகிச்சைக்காக சென்றவர் மர்ம மரணம் – போதை மறுவாழ்வு மையத்தில் நடந்தது என்ன?

சென்னை ராயப்பேட்டை டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ராஜி (45). இவர் ஆட்டோவுக்கு கூண்டு கட்டும் வேலை செய்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவரை ராயப்பேட்டை பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் அவரின் குடும்பத்தினர் சேர்த்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை ராஜியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக போதை மறுவாழ்வு மையத்தின் ஊழியர்கள் அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜிவின் மனைவி கலா, குடும்பத்தினர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மரணம்

இதையடுத்து ராஜின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக அண்ணாசாலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ராஜின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் உறவினர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டினர். அதன்பேரில் போதை மறுவாழ்வு மைய நிர்வாகிகள், ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார், “ராஜியை அடித்தே கொலை செய்து விட்டதாக அவரின் உறவினர்கள் புகாரளித்திருக்கின்றனர். அதனடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது. முதற்கட்டமாக சம்பந்தப்பட்ட போதை மறுவாழ்வு மையத்தில் ஆய்வு நடத்தினோம். அதில் ராஜி அணிந்திருந்த உடையில் ரத்தக்கறைகள் இருந்தது தெரியவந்தது. உடைந்த நிலையில் சில பிரம்புகளையும் கைப்பற்றியுள்ளோம். அதுதொடர்பாக மையத்தின் மேலாளர் மோகன், ஊழியர்கள் ஜெகன், பார்த்தசாரதி ஆகியோரிடம் விசாரணை நடத்திவருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கிடையில் ராஜின் உடலில் பிரம்பால் அடித்ததற்கான காயங்கள் இருப்பதாக அவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பற்களும் உடைந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். அதுதொடர்பாகவும் விசாரணை நடந்துவருகிறது” என்றனர்.

ராஜி

உயிரிழந்தவரின் சகோதரி முனியம்மா, “என் தம்பியை போதை மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் அடித்தே கொலை செய்து விட்டனர். போதை பழக்கத்திலிருந்து தம்பியை மீட்பதற்காகதான் அங்கு சேர்த்தோம், ஆனால் போதை மறுவாழ்வு மையத்தில் ராஜியை சித்ரவதை செய்து அடித்தே கொலை செய்துவிட்டனர். எனவே சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.