சொல்லி அடிக்கும் கில்லி: அரசியல்வாதியாக சாதிப்பாரா பி.கே.,?

நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அடுத்த வரும் நாட்களில் இன்னும் 3 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பல் அதிகரிக்கலாம் என்று வானிலை ஆய்வு மையங்கள் கணித்து வரும் நிலையில், ‘பத்த வச்சுட்டியே பரட்ட’ என்பது போன்று அரசியல் கட்சி தொடங்குவது பற்றி ஹின்ட் கொடுக்கும் வகையில், ட்வீட் ஒன்றை போட்டு அரசியல் அரங்கின் சூட்டை ஏகத்தும் கிளப்பி விட்டிருக்கிறார்
பிரஷாந்த் கிஷோர்
.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் குடை; காங்கிரஸ் கட்சியில் இணையப் போகிறார்; 2024 தேர்தலுக்கு யாருடன் ஒப்பந்தம் போடப் போகிறார் என்று கடந்த சில வாரங்களாகவே ஹெட்லைன் செய்திகளை ஆக்கிரமித்து வைத்திருந்த பி.கே., மக்களிடம் நேரடியாக செல்லும் நேரம் வந்து விட்டதாகவும், நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள பங்கேற்பாளராக இருப்பதற்கும், மக்கள் சார்பான கொள்கையை வடிவமைக்க உதவுவதற்கும் எனது தேடலானது 10 வருட ரோலர்கோஸ்டர் சவாரிக்கு வழிவகுத்தது! தற்போது, பிரச்சினைகளை நன்றாக புரிந்து கொள்ள உண்மையான மாஸ்டர்களான மக்களிடம் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. மக்கள் நல்லாட்சிக்கான பாதைக்கு செல்ல வேண்டிய நேரம் இது. ஷுருஆத் #பிஹார் சே.” என்று பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம், பிரஷாந்த் கிஷோர் புதிய கட்சித் தொடங்கவுள்ளதாகவும், அவரது அரசியல் பயணம் பீகார் மாநிலத்தில் இருந்து தொடங்கவுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால், அடுத்த வாரத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை அவர் நடத்தவுள்ளதாகவும் அப்போது அவரது அடுத்தக்கட்ட நகர்வு குறித்து தெரிய வரும் என்கிறார்கள்.

பீகாரில் உள்ள போஜ்புரி பேசும் பகுதியைச் சேர்ந்த 45 வயதான பிரஷாந்த் கிஷோர், ஒரு தொழில்முறை தேர்தல் ஆலோசகராக, பிரபல தேர்தல் உத்தியாளராக அறியப்படுபவர். ஊதியம் பெறும் தொழில்முறை ஆலோசகராக பல்வேறு கட்சிகளுக்கு பணியாற்றி, அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்ட பிரஷாந்த் கிஷோர், 2014ஆம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடி என்ற இமேஜை மக்களிடம் கொண்டு சேர்த்து பாஜகவின் வெற்றிக்கு வித்திட்டவர். ‘சொல்லி அடிக்கும் கில்லி’ என்பதை நிரூபிக்கும் வகையில், பாஜகவுடனான பெரும் சவால்களுக்கு மத்தியில் மேற்குவங்க தேர்தலில் மம்தா பானர்ஜியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இதனால், அவரது பிம்பம் பெருமளவு உயர்ந்தது. ஆனால், வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ள கட்சிகளிடம் மட்டுமே அவரது ஐபேக் நிறுவனம் ஒப்பந்தம் போடும் என விமர்சிப்பவர்கள் 2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-சமாஜ்வாதி கூட்டணிக்கு பணியாற்றியபோது அவரது உத்தி பலிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், அந்த தேர்தலில் பி.கே., சொன்னதை காங்கிரஸ் கட்சி கேட்காததாலேயே தோல்வியடைந்ததாக பதில்கள் வருகின்றன.

இதனிடையே, 2021 மே 2 ஆம் தேதி ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், தான் தொழில்முறை அரசியல் ஆலோசகராக இருக்கப்போவதில்லை என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் பிரஷாந்த் கிஷோர். ஆனால், மழை விட்டும் தூவானம் விடாதது போல், அடுத்தடுத்து அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து மெகா கூட்டணிக்கு திட்டமிட்டார். எனவே, அவர் அரசியலுக்கு வரக்கூடும் என்ற ஊகங்கள் அதன் பிறகு வலுப்பெற்றன. ஆனால், அவர் அரசியலில் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் எப்போதுமே இருக்கும். அவர், அரசியல் ஆலோசகரா அல்லது அரசியல்வாதியா என்ற தெளிவு எப்போதுமே இருந்ததில்லை.

பிரஷாந்த் கிஷோருக்கு அரசியல்வாதி வேடம் புதிதல்ல. ஏற்கனவே, ஐக்கிய ஜனதாதள கட்சியின் தேசிய துணைத் தலைவராக இருந்து அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது, ஐக்கிய ஜனதாதள கட்சியில் இருந்து கொண்டே டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு அவர் பணியாற்றிய விவகாரம் பேசுபொருளாது. இப்போதும் கூட, காங்கிரஸ் கட்சியில் இணைந்தாலும் வேறு கட்சிகளுக்கு பணியாற்றுவதாக கூறியதால் பேச்சுவார்த்தை சலசலப்புகள் ஏற்பட்டதாக ஒரு தகவலும் வெளியானது.

இந்த பின்னணியில்தான், மக்களிடம் நேரடியாக செல்லும் நேரம் வந்து விட்டதாக பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பிரஷாந்த் கிஷோரிடம் ஒரு முழு ஆய்வுக் குழு இருக்கிறது. அவர்கள் கையில் ஒட்டுமொத்த இந்தியாவின் டேட்டாவும்; அரசியல் கட்சிகளின் டேட்டாவும் இருக்கிறது. தேர்தலின் போது ஒருவர் வெற்றிபெற்றுவிடுவார் என்ற கருத்தை உருவாக்குவது, பிரச்சினைகளை புரிந்து கொள்ளுதல், தேர்தல் நடைபெறும் பகுதிகள் தொடர்பான கணக்கு மற்றும் பொதுமக்களின் மனநிலையை மதிப்பிட்டு, யார் எப்போது எங்கு என்ன பேச வேண்டும் என்று திட்டமிடுவதில் அவர் வல்லுநர் என்று கூறப்படுகிறது. ஒரு கட்சியின் ப்ளஸ் மைனஸ் என அனைத்துமே பி.கே.,வின் விரல் நுணியில் உள்ளன என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால், இதை வைத்து அவரால் அரசியலில் சோபிக்கமுடியுமா? என்றால் அது நிச்சயம் முடியாது. ஒரு உத்தி வகுப்பாளர் உரையை சிறப்பாக எழுத முடியும்; ஆனால், அதனை அரசியல் தலைவரால்தான் பொதுமக்களிடம் வலுவாக கொண்டு செல்ல முடியும். உதாரணத்துக்கு பிரதமர் மோடி சிறந்த பேச்சாளர். பொதுமக்களுக்கு அவர் பேசுவது பிடிக்கிறது. இந்த வகையில், பி.கே., கிங்மேக்கராக இருக்க முடியுமே தவிர ‘கிங்’காக உருவாக முடியுமா என்பது நம்முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வி.

ஆனால், தற்போதைய அரசியல் சூழ்நிலை மாறிப்போயுள்ளது. கடந்த காலகட்டத்தை எடுத்துக் கொண்டால் தெருமுணை பிரசாரக் கூட்டங்கள், ஊருக்கு ஊர் பொதுக்கூட்டங்கள் போட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் முழங்குவார்கள். அவர்களது பேச்சை கேட்க ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். மக்களை நேரடியாக, தைரியமாக அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து வந்தனர். அதன்பிறகு, மக்களை சந்திக்க அச்சமுற்ற அரசியல் கட்சிகள், பணத்தை கொடுத்து கூட்டத்தை கூட்டி, போலியான பலத்தை காட்டத்தொடங்கினர். செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் என தேர்தல் பிரசார முறைகள் காலத்திற்கு ஏற்ப பல்வேறு பரிணாமங்களை அடைந்து வருகிறது. இதனால், அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்குமான நேரடி தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால், பிரசாந்த் கிஷோர் போன்ற தேர்தல் உத்தியாளர்களின் மவுசு அதிகரிக்கத் தொடங்கியது. இது அரசியல் வெற்றிடத்தையே காட்டுகிறது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த வெற்றிடத்தை பிடிக்கவே பி.கே., முயற்சிப்பதாக கூறுகிறார்கள். அதனாலேயே அவர் மக்களை சந்திப்பதாக கூறியுள்ளார் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு படி பின்னால் சென்று பார்ப்பதில்லை. ஆனால், இதனை உத்தி வகுப்பாளராக இருக்கும் பி.கே., பலமுறை பார்த்ததால் அரசியல்வாதியாக அவரால் சாதிக்க முடியும் என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.

அதேசமயம், சமூக வலைதள லைக்குகள் வாக்குகளாக மாறாது என்பதையும் பிரஷாந்த் கிஷோர் நன்கு புரிந்தே வைத்திருப்பார். ஏனெனில், செய்தித்தாள், தொலைக்காட்சிகள், லேப்டாப், குறிப்பெடுப்பது போன்றவற்றை அரிதாகவே உபயோகிப்பதாகவும், செல்போனை மட்டும் உபயோகிப்பதாகவும் பேட்டி ஒன்றில் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வெற்றி பெறும் கட்சிகள், எவ்வளவு பிரபலமாக இருந்தாலும், பொதுவாக மக்கள் வாக்குகளில் 40-45 சதவீதத்துக்கு மேல் பெறுவதில்லை. 2019 இல்,
பாஜக
38 சதவீத வாக்குகளைப் பெற்று 300 இடங்களுக்கு மேல் வென்றது. இதனையும் பிரஷாந்த் கிஷோரே தெரிவித்துள்ளார். எனவே, அவர் ஒரு தலைவராக உருவெடுக்க வேண்டுமானால், அடிமட்ட நிலையில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அடிமட்ட அளவில் அவர் தன்னை நிரூபிக்க வேண்டும் என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.