”தமிழகத்தில் வியாபாரத்திற்காக உச்ச நடிகர்கள் மொழி குறித்து பேசுவதில்லை” -அமீர் விமர்சனம்

திரைப்பட கலைஞர்களை வைத்து இந்தியை வளர்க்க பாரதிய ஜனதா கட்சி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என மதுரையில் இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் கன்னட நடிகர் கிச்சா சுதீப் இடையே, இந்தி மொழி தேசிய மொழி அல்ல என்ற வாக்குவாதம் ட்விட்டரில் எழுந்ததையடுத்து, இந்திய சினிமாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த திரைப்பட கலைஞர்கள், இந்தி மொழி குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மதுரையில் இயக்குர் அமீர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக மக்கள் ஒற்றுமையாக சகோதரத்துவடன் இணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் அரசியலால் மக்கள் பிரிந்து உள்ளனர்.

தமிழ் பேசுபவர்கள் கெட்டவர்களா (சுஹாசினிக்கு பதில்). இந்தி தெரியாத மக்கள் நாட்டை வெளியேற வேண்டும் என சொல்கிறார்கள். நாட்டை விட்டு வெளியேற தயார், எது நாடு, யார் யார் இன மக்கள் என சொல்ல வேண்டும். இந்தியை திணிப்பவர்கள் என் தேசத்தை விட்டு வெளியேற வேண்டும். தமிழகத்தில் மிக ஆழமாக ஆரியம் காலுன்றி வருகிறது. திரைக்கலைஞர்களை திரையில் மட்டுமே ரசிக்க வேண்டும்.

இந்தி பேச வேண்டும் என சொல்வது தான் பாசிசம். கலைக்கு மொழி கிடையாது. தமிழ் கலைஞர்கள் வெளி மாநிலங்களில் தமிழ் குறித்து பேசுவதில்லை. சினிமா வாய்ப்பு பறிபோகும் நிலை வரும் என அச்சம். தமிழ் கலைஞர்களில் உச்சத்தில் உள்ள சிலர், சுய லாபத்துக்காக சுய நலத்துடன் நடந்து கொள்கிறார்கள். 

image

தமிழகத்தில் உச்சத்தில் உள்ள நடிகர்கள், தங்களது வியாபாரம் பாதிக்கப்படும் என்பதற்காக, மொழி சார்ந்த எந்த பிரச்சனைகள் குறித்தும் பேசுவதில்லை. இது அவர்களுடைய ரசிகர்களுக்கு செய்யும் துரோகம். மண்ணுக்காக, மக்களுக்காக சில நடிகர்கள் போராடி வருகிறார்கள். மொழி, இனம் தொடர்பாக வெறி இருக்க கூடாது. மொழி, இனப்பற்று இருக்க வேண்டும். தமிழ் மக்களை, தமிழ் இசையோடு இணைத்து வைத்தவர் இளையராஜா. ஒட்டுமொத்த இந்திய தேசமும் ஏ.ஆர்.ரகுமானை கொண்டாடியது.

ஏ.ஆர்.ரகுமான் இந்தியாவில் புகழ்பெற்றதால் அவர் மும்பையில் விரட்டப்பட்டார். பாஜக சினிமா கலைஞர்களை வைத்து, இந்தியை வளர்க்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சமஸ்கிருதம் பயின்றால்தான் மருத்துவம் பயில முடியும் என்ற நிலையை உடைத்தது சமூக நீதி கட்சிகள்.

image

மீண்டும் அந்த நிலையை புகுத்த நினைக்கிறார்கள். என் மொழியின் மீது மற்றொரு மொழியை திணித்தால், மொழிக்காக களத்தில் நின்று சண்டையிடுவது அவசியமாக உள்ளது” இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல தங்கை நகை கடையில் அட்சய திருதியை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியில் நடிகை சுஹாசினி பங்கேற்று பேசியபோது, 

”நடிகர்களுக்கு அனைத்து மொழிகளும் தெரிந்தே ஆக வேண்டும். அனைத்து மொழிகளையும் மதித்தே ஆக வேண்டும். எல்லோரும் அனைத்து மொழிகளையும் சமமாக கருத வேண்டும். இந்தி நல்ல மொழி. அதனைக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள். அவர்களுடன் நாம் பேச வேண்டும் என்றால் அந்த மொழியை கற்று கொள்ள வேண்டும். தமிழர்களும் நல்லவர்கள். அவர்களுடன் தமிழில் பேசினால் மகிழ்ச்சி அடைவார்கள்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.