திருமலை: திருப்பதி அடுத்துள்ள தாமிநேடுபகுதியை சேர்ந்தவர் வெங்கடரமணா. இவர் திருமலையில் 4 மாட வீதிகளில் பக்தர்களுக்கு திருநாமம் இட்டு பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது தந்தையுடன் சுற்றித் திரிந்த சிறுவன் கோவர்தன் (5), ஏழுமலையானின் கோயிலுக்கு எதிரே விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென சிறுவனைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், திருமலை 2-வது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து போலீஸார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, மாலை 5.45 மணிக்குகோயிலுக்கு எதிரே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கோவர்தனை, மொட்டை அடித்திருந்த பிங்க் நிற சுடிதார் அணிந்த ஒரு பெண், மெல்ல சிறுவனிடம் பேச்சுகொடுத்து, அவனை கைப்பிடித்தபடி அங்கிருந்து அழைத்து செல்கிறார். அதன் பின்னர், 6.15 மணிக்குதிருமலை பாலாஜி பஸ் நிலையத்தில் அந்த சிறுவனுடன் பஸ்ஸில் ஏறிய அந்த பெண், 7.15 மணிக்கு திருப்பதி பஸ் நிலையத்தில் இறங்குகிறார். அதன் பின்னர் அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை.
தேடும் பணி தீவிரம்
இது தொடர்பாக நேற்று காலைமுதல் போலீஸார் திருப்பதி மற்றும்அதன் சுற்றுப்புற ஊர்களில் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறுவனை கடத்தி சென்ற பெண்தமிழில் பேசியதாக கூறப்படுவ தால், அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்குமோ என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக திருமலை 2-வது போலீஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு திருப்பதி, வேலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தசிறுவன் குறித்த தகவல் தெரிந்தால்அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கும்படி திருமலை போலீஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.