திருவலஞ்சுழியில் சோழர்களின் போர் தெய்வம் `ஏகவீரி' சோழமாதேவி எழுப்பிய குலதெய்வ கோயில்! சோழர் உலாவில்!

‘பொன்னி சூழ்ந்த வலஞ்சுழி’ என்று அப்பரும் ‘பொன்னி வலஞ்சுழி’ என்று சம்பந்தரும் போற்றிய காவிரியின் தென்கரைத் தலம் திருவலஞ்சுழி. சுந்தரரும் பாடிப்பரவியுள்ளார். திருவலஞ்சுழி கருங்கல் பலகணி செய்ய முடியாத அதிசயங்களில் ஒன்று! வெண்மை நிறம் கொண்ட சுவேத விநாயகரும் இங்கு விசேஷம் என்று அறிந்திருக்கலாம். இது மட்டும் திருவலஞ்சுழி இல்லை. வரலாற்றிலும் பல அதிசயச் சுவடுகளைக் கொண்ட தலமிது.

திருவலஞ்சுழி கோயில்

திருவலஞ்சுழி என்னும் கபர்தீஸ்வரர் ஆலயத்தில் அருள்புரியும் க்ஷேத்திர பாலர்தான் ராஜராஜ சோழனின் குலதெய்வம் என்கிறது வரலாறு. வெள்ளை விநாயகருக்கு அருகிலேயே க்ஷேத்திரபாலர் கோயில் உள்ளது. ‘க்ஷேத்திர பாலர்’ என்றால் பைரவரையே குறிக்கும். க்ஷேத்திரபாலர் பூஜையைவிடச் சிறந்த பூஜை இல்லை என்கின்றன ஆகமங்கள். இத்தகைய க்ஷேத்திரபாலருக்குத் தனி ஆலயம் எடுத்து வழிபட்டாள் சோழ மாதேவி.

ராஜராஜ சோழனின் பட்டத்து ராணியான உலகமாதேவி எனும் தந்திசக்தி இந்த க்ஷேத்திரபாலர் கோயிலை எழுப்பியதாகக் கல்வெட்டு கூறுகிறது. கோயிலின் வடக்குச் சுவரில் காணப்படும் ‘ஸ்ரீராஜராஜ தேவர் மகாதேவியார் தந்திசக்தி விடங்கியாரான ஸ்ரீஒலோகமாதேவியார் உய்யக்கொண்டார் வளநாட்டுப் பாம்பூர் நாட்டுத் திருக்குடமூக்கின்பால் திருவலஞ்சுழி நாம் எடுப்பித்த திருக்கற்றளிப் பிள்ளையார் க்ஷேத்திரபால தேவர்க்கு…’ என்ற கல்வெட்டுச் செய்தி இதை உறுதிப்படுத்துகிறது. க்ஷேத்திரபாலரே ராஜராஜனின் குலதெய்வம். ராஜராஜன் தனக்கு வழங்கப்பட்ட பொன்னைக் கொண்டு க்ஷேத்திரபாலருக்கு ஆபரணங்கள் செய்வித்ததாகவும் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. ராஜராஜன் மறைவுக்குப் பின் சோழமாதேவி பொன்பூக்களைக் கொண்டு க்ஷேத்திரபாலரை வழிபட்ட செய்திகளும் கல்வெட்டில் உள்ளன.

க்ஷேத்திரபாலர் கோயில்

இது மட்டுமின்றி இங்கு அஷ்டபுஜ காளி திருவடிவம் சிறப்புமிக்கது. இவளை, ‘ஏகவீரி’ என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. `பிடாரி ஏகவீரி’ என்றும் குறிக்கின்றன கல்வெட்டுகள். ராஜராஜனின் மாமியாரான குந்தணன் அமுதவல்லியார், பிடாரி ஏகவீரிக்கு ‘அவபல அஞ்சனை’ செய்வதற்காக நிவந்தங்கள் வழங்கினார் என்ற தகவலைச் சொல்கிறது ஒரு கல்வெட்டு. ராஜராஜனும் அவர் மைந்தன் ராஜேந்திரனும் போருக்குக் கிளம்புமுன், இந்த மாகாளியின் சந்நிதியில் தங்களின் வாள், வேல் போன்ற ஆயுதங்களை வைத்து வழிபட்டு, இவளிடம் உத்தரவுபெற்ற பிறகே போருக்குப் புறப்படு வார்கள், அவளின் திருவருளால் வெற்றிமேல் வெற்றியைக் குவித்தார்கள் என்றும் வரலாறு கூறுகின்றது.

பிடாரி ஏகவீரி

உத்குடி ஆசனத்துடன், திருச் செவிகளில் விசேஷ குண்டலங்கள், கழுத்தில் சரப்பளி, கால்களில் சலங்கை, தொடைவரை மறைத்த சிற்றாடை என வீரமும் அழகும் நிறைந்த திருக்கோலத்தில் துடியாகக் காட்சி தருகிறாள் ஏகவீரி. விஷ்பூர முத்திரையுடன், கனிவுடன்கூடிய கீழ்நோக்கிய பார்வையுடன் அருள்கிறாள் காளி. ஒருகாலத்தில் எல்லைத் தெய்வமாகத் தனிக்கோயிலில் திருவலஞ்சுழியில் அருள்பாலித்தவள் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். மகிஷாசுரனை வதம் செய்த காளிதேவி ஈசனின் ஆணைப்படி இங்கு வந்து சிவபூஜை செய்தாள் என கோயில் புராணம் புராணம் கூறுகின்றது.

சுவேத விநாயகர்
திருவலஞ்சுழிநாதர்
பெரிய நாயகி

ஏராளமான கல்வெட்டுச் செய்திகளையும் அழகிய சிற்பங்களையும் கொண்டுள்ளது திருவலஞ்சுழி ஆலயம். இங்கு கபர்தீஸ்வரர் என்ற பெயரில் ஈசன் மூலவராக எழுந்தருளியுள்ளார். இவரே திருவலஞ்சுழிநாதர் என்றும் சடைமுடிநாதர் என்றும் போற்றப்படுகிறார். அம்பிகை, பெரிய நாயகி என்கிற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். ஆலய கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன், பிட்சாடனர், நடராஜர், அர்த்தநாரீஸ்வரர், துர்கை, சனீஸ்வரர் ஆகிய கடவுளர் காட்சி கொடுக்கின்றனர்.

மண்டபத்தில் லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியர் தரிசனம் தந்து அருள்புரிகின்றனர். பிராகாரத்தில் 32 சிவலிங்கங்கள், நான்கு விநாயகர்கள், பாலமுருகன், மகாவிஷ்ணு, துர்கை, பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வராகி, இந்திராணி, சாமுண்டி, விநாயகர், வலஞ்சுழி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலட்சுமி ஆகியோர் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.

சோழர் உலா!

இன்னும் இன்னும் சோழர்களின் பெருமைகளைத் தன்னுள்ளேயே கொண்டிருக்கும் திருவலஞ்சுழியின் பெருமைகளை அறியவும், தரிசிக்கவும் ‘சோழர் உலா!’ எனும் சரித்திரமும் சமயமும் கலந்த யாத்திரை உங்களை அழைக்கிறது.

முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு: 97909 90404, 73974 30999

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.