பெருந்தொற்றைக் குறித்தும், போர் குறித்த செய்திகளையுமே அதிகம் நாம் கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில், கனேடிய பெண்மணி ஒருவர் தனக்கு எதிர்பாராமல் உதவி செய்து, நெகிழவைத்த ஒரு அழகிய இளம்பெண்ணைக் குறித்த செய்தி ஒன்றைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Barrie என்ற இடத்தில் வாழ்பவர் Martha Hopper.
ஒரு நாள் Martha பல்பொருள் அங்காடி ஒன்றிற்குச் சென்றுள்ளார். பொருட்களை வாங்கிக்கொண்டு பில் போடச் செல்லும்போது, அவருக்கு முன்னால் பில் போட்டுக்கொண்டிருந்த ஒரு அழகிய இளம்பெண், நான் இன்று உங்களுக்கான பில் தொகையை செலுத்த விரும்புகிறேன் என்று Marthaவிடம் கூறியிருக்கிறார்.
Martha மறுக்க, அந்த இளம்பெண்ணோ, இன்றைய நாள் எனக்கு மிகச் சிறப்பாக அமைந்தது, அந்த மகிழ்ச்சியை நான் இன்னொருவருடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஆகவே, தயவு செய்து உங்கள் பில் தொகையை செலுத்த என்னை அனுமதியுங்கள் என வற்புறுத்த, ஒரு வழியாக Martha சம்மதித்திருக்கிறார்.
நான் ஒரு வயது முதிர்ந்த பெண்மணி, எனக்கு இதுவரை இப்படி ஒரு விடயம் நிகழ்ந்ததில்லை என்று கூறும் Martha, அந்த இளம்பெண்ணுக்கு பல முறை நன்றி தெரிவித்துக் கொண்டதுடன், அந்த இளம்பெண்ணின் மகிழ்ச்சி மற்றவர்களுக்கும் பரவும் வகையில், தானும் இதேபோல மற்றவர்களுக்கு உதவுவதாக வாக்களித்திருக்கிறார்.
தன்னை நெகிழச் செய்த இந்த சம்பவத்தை ஊடகம் ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ள Martha, அந்த இளம்பெண்ணின் பெயரைக் கேட்க மறந்துவிட்டாராம்.
ஆகவே, மிக்க நன்றி ’அழகிய இளம்பெண்ணே’ என்று அந்த பெண்ணை அழைக்கும் Martha, தன் நன்றியைத் தெரிவிப்பதற்காக, தான் அந்த விடயத்தை ஊடகம் ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், நான் தேவதைகளை நம்புகிறேன், அவர்களில் ஒருவரை நான் சந்தித்தேன் என்றும் கூறுகிறார்.
இந்த செய்தி நகரத்தில் பரவவேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்துள்ள Martha, நம்மைச் சுற்றியும் சிறந்த மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதையும், அவர்கள் இரக்கத்துடன் நல்ல விடயங்கள் செய்கிறார்கள் என்பதையும் மற்றவர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்றும் கூறுகிறார்.