புதுடெல்லி: இந்தியாவின் பிரமாண்ட ஐபிஓவாக கருதப்படும் எல்ஐசி நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு நாளை தொடங்குகிறது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும், உக்ரைன் – ரஷ்யா போர் மூண்டதால் பங்குச் சந்தைகள் கடுமையாகச் சரிவு காரணமாக பங்கு வெளியீடு தள்ளிப்போனது.
பங்குச்சந்தை ஏற்ற – இறக்கமாக இருப்பதன் காரணமாக எல்ஐசியின் பங்கு வெளியீடு பாதிக்கப்படக் கூடும் என்பதால் மத்திய அரசு பங்கு வெளியீட்டை தாமதித்து வந்தது.
செபியிடம் சமர்ப்பித்த அறிக்கையின்படி மே 12-ம் தேதிக்குள் எல்ஐசி பங்கு விற்பனையை தொடங்க வேண்டும். இதனால் பொதுபங்கு வெளியீடு மே 4-ம் தேதி தொடங்கி மே.9 தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
எல்ஐசி பங்குகளில் ஒரு பகுதியை விற்பதன் மூலம் சுமார் ரூ. 21,000 கோடி திரட்ட அரசு எதிர்பார்க்கிறது. பேடிஎம் ஐபிஓ 2021 இல் ரூ.18,300 கோடி திரட்டியது.
மொத்தம் 31.6 கோடி பங்குகள் விற்கப்படுகிறது. இதில் 50% நிறுவன முதலீட்டாளர்களுக்கும், 35% சில்லறை முதலீட்டாளர்களுக்கும் 10% எல்ஐசி பாலிசிதாரர்களுக்கும் ஒதுக்கப்படுகிறது. எல்ஐசி அதன் பாலிசிதாரர்களுக்கு ரூ.60 தள்ளுபடியும், அதன் ஊழியர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு ரூ.40 தள்ளுபடியும் வழங்குகிறது.
ஒவ்வொரு பங்கும் ரூ.10 முகமதிப்பு கொண்டிருக்கும். மொத்தம் 31.62 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படும். இதில் ஊழியர்களுக்கு 5 சதவீதமும், தனிநபர் காப்பீடுதாரர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்படும்.
எல்ஐசியின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆரம்ப பொது பங்கு வெளியீடு மே-4 அன்று ரூ.902-949 விலையில் தொடங்கப்பட உள்ளது. இது நாட்டிலேயே மிகப்பெரிய ஐபிஓவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்ஐசி ஐபிஓக்கு விண்ணப்பிக்க என்னென்ன தேவை?
டிமேட் கணக்கு வைத்திருக்க வேண்டும்
அதில் கேஓய்சி செயல்முறையை முடிக்க வேண்டும்.
இதற்கு தேவையான ஆவணங்கள்: அடையாளச் சான்று, வயது சான்று, வங்கி விவரங்கள் ஆகியவை ஆகும்.
டிமேட் கணக்கு மற்றும் யுபிஐ தளத்தின் மூலம் இதனை செய்ய முடியும்.
உங்கள் வங்கிக் கணக்கில் உள்நுழைய வேண்டும். அதில் முதலீட்டு பிரிவில் ஐபிஓ /இ-ஐபிஓவுக்கான விருப்பம் இருக்கும். அதில் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
விண்ணப்பிக்க எல்ஐசி என்பதைத் தேர்வு செய்து பங்குகளின் எண்ணிக்கை மற்றும் விலையை உள்ளிடவும்.
பின்னர் இப்போது விண்ணப்பிக்கவும், விருப்பத்தை அழுத்தி உங்கள் ஆர்டரை வைக்கவும்.
ஐபிஓக்கு விண்ணப்பித்தவுடன் நிறைவு பெறும்போது அவர்களின் வங்கி கணக்கில் முதலீட்டாளர்களின் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும்.
எல்ஐசி பாலிசிதாரராக இருந்தால் முதலில் உங்கள் பாலிசி மற்றும் டிமேட் கணக்கு இரண்டையும் உங்கள் நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) இணைக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.