நீலகிரி மாவட்டம் குன்னூர் புரூக் லேண்ட்ஸ், ஆள்வார்பேட்டை செல்லும் சாலையை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதியில் காட்டு மாடுகள் உலா வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது வனப் பகுதிகளில் வறட்சி காணப்படுகிறது. இதன்காரணமாக யானை, கரடி, காட்டுப்பன்றி, காட்டெருமை போன்ற வன விலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்புப் பகுதிகளில் உலா வருவது அதிகரித்து காணப் படுகிறது. இந்நிலையில் குன்னூர் புரூக் லேண்டஸ், ஆள்வார் பேட்டை, கன்னிமாரியம்மன் கோயில் தெரு போன்றப் பகுதிகளில் ஒற்றை காட்டு மாடு சாலையின் ஓரத்தில் குடியிருப்பு அருகே உலா வருகின்றது.
ஏற்கெனவே கன்னிமாரியம்மன் கோயில் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவரை சில மாதங்களுக்கு முன்பு காட்டெருமை தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் காட்டு மாட்டை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என்று இப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM