பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா, ராகுல் காந்தி ‘நைட் கிளப்பில்’ இருப்பது போல காட்டும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டதையடுத்து சர்ச்சையானது. இந்த வீடியோ வெளியிட்ட உடனேயே, காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, நேபாளத்தில் பத்திரிக்கையாளர் நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சென்றபோது எடுக்கப்பட்டடு இந்த வீடியோ என்று தெரிவித்துள்ளது.
பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா, “மும்பை முற்றுகையிடப்பட்டபோது ராகுல் காந்தி ‘நைட் கிளப்பில்’ இருந்தார். அவருடைய கட்சி வெடிக்கும் நேரத்தில் அவர் ஒரு ‘நைட் கிளப்பில்’ இருக்கிறார். அவர் உறுதியானவர். சுவாரஸ்யமாக, காங்கிரஸ் கட்சி தங்கள் தலைமையை நேரு குடும்பத்துக்கு வெளியே இருந்து தேர்வு செய்ய மறுத்த உடனேயே, அவர்களின் பிரதமர் வேட்பாளர் குறித்து வெற்றிகரமான வேலைகள் தொடங்கியுள்ளன…” என்று ட்வீட் செய்தார்.
ராகுல் காந்தி எங்கே இருக்கிறார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், “அப்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பிறந்தநாள் கொண்டாடவும், கேக் வெட்டவும் பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு சென்றது போல் ராகுல் காந்தி அழைக்கப்படாத விருந்தாளியாக செல்லவில்லை. நண்பர் ஒருவரின் தனிப்பட்ட திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நட்பு நாடான நேபாளத்திற்கு ராகுல் காந்தி சென்றுள்ளார். அந்த நண்பர் ஒரு பத்திரிகையாளர். அதனால், நான், அவர்கள் (பாஜக) உங்கள் பத்திரிகையாளர் சகோதரத்துவத்தையும் துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என நினைக்கிறேன்.” என்று கூறினார்.
காத்மாண்டு போஸ்டில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டியுள்ள பிடிஐ செய்தி நிறுவனம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது நேபாள நண்பர் சும்னிமா உதாஸின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக காத்மாண்டு வந்துள்ளார் என்று தெரிவித்துள்ளது.
“இந்த நாட்டில் இருக்கிற ஒரு குடும்பத்துக்கு இந்த நாட்டில் நண்பர்கள் இருப்பதும், அவர்கள் திருமணம், நிச்சயதார்த்த விழாக்களில் கலந்துகொள்வதும் நமது கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தின் விஷயம். திருமணம் செய்துகொள்வது, ஒருவருடன் நட்பாக இருப்பது அல்லது அவர்களின் திருமண விழாவில் பங்கேற்பது இன்னும் இந்த நாட்டில் குற்றமாக மாறவில்லை” என்று ரன்தீப் சுர்ஜிவாலா அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
மேலும், ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், “அனேகமாக, இதற்கு பிறகு பிரதமர் மோடியும் பாஜகவும் திருமணத்தில் கலந்துகொள்வது சட்டவிரோதம் என்று முடிவு செய்யலாம். நண்பர்கள் அல்லது குடும்ப விழாக்களில் பங்கேற்பது குற்றம் என்று அவர்கள் கூறலாம். ஆனால், நண்பர்களின் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொள்ளும் நமது நிலை, பழக்கவழக்கங்கள் மற்றும் நாகரீக நடைமுறைகளை நாம் அனைவரும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் எனக்கு தெரியப்படுத்துங்கள்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“