வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் மெட்டா ஆப்டிகல் சாதனங்கள் துறையில் ஆய்வு செய்து வரும் டாக்டர் லூகாஸ் வெஸ்மேன் என்பவர் மலேரியா போன்ற தொற்று நோய்கள் மற்றும் தொற்று அல்லாத நோய்களை நானோ தொழில்நுட்பம் உதவியுடன் ஸ்மார்ட்போன் கேமராவை கொண்டு கண்டறியும் முறையை பரிசோதித்து பார்த்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும் கூறியதாவது: மலேரியா போன்ற தொற்று நோய்கள் பல இடங்களில் மரணத்திற்கு காரணமாக உள்ளன. மலேரியாவுக்கான சிகிச்சைகள் பல நடைமுறையில் இருந்தாலும் தொலைதூர மக்களிடம் நோயறியும் கருவிகள் இல்லாததே, ஆரம்ப நிலையில் கண்டறியாமல் போக காரணமாக உள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கான சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வது விஞ்ஞானிகளுக்கு ஒரு சவாலாக எழுந்துள்ளது.
நானும் என்னுடன் ஆய்வு பணியாற்றுபவர்களும் உயிரியல் செல்களை ஆய்வு செய்வதற்கான புதிய முறையை உருவாக்கியுள்ளோம். அது ஸ்மார்ட்போன் கேமரா லென்சில் பொருத்தும் அளவிற்கு சிறியது. இதுவரை ஆய்வகத்தில் மட்டுமே சோதனை செய்துள்ளோம். எதிர்காலத்தில் இந்த நானோ தொழில்நுட்பம் ஒரு ஸ்மார்ட்போனை பயன்படுத்தி யதார்த்த உலகில் நோயைக் கண்டறிய உதவும் என்று நம்புகிறோம். அதன் மூலம் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும்.
கேமரா லென்ஸ் எப்படி ஆய்வு செய்யும்?
நுண்ணோக்கிகள் மூலம் உயிரியல் செல்களை ஆய்வு செய்வதே நோயறிதலின் அடிப்படை. அந்த செல்களில் காணப்படும் குறிப்பிட்ட மாற்றங்கள் நோயினை குறிக்கும். உதாரணத்திற்கு நோயாளியின் ரத்த சிவப்பணுக்களில் குறிப்பிட்ட மாற்றங்களைக் நுண்ணோக்கிப் படங்கள் காட்டினால் அதனை வைத்து மலேரியாவை உறுதிப்படுத்துவர். பேஸ் இமேஜிங் செயல்முறையைப் பயன்படுத்தி இதுப்போன்ற செல்களை ஆராய்வர். ஆனால் இதற்கான உபகரணங்கள் பெரிது மற்றும் செலவுமிக்கது. தொலைதூர பகுதிகளில் பயன்படுத்த வாய்ப்பு இல்லை. இங்கு தான் நானோ தொழில்நுட்பம் கைக் கொடுக்கிறது.
நானோ டெக்
வழக்கமான நுண்ணோக்கி லென்ஸ் நானோ தொழில்நுட்பத்தை மேம்படுத்தி மாற்றப்படுகிறது. மிக மெல்லிய தகட்டில் நானோ அமைப்பை பதிந்துள்ளோம். “ஆப்டிகல் ஸ்பின்-ஆர்பிட் கப்ளிங்” என்ற விளைவைப் பயன்படுத்தி வழக்கமான நுண்ணோக்கிகள் செய்யும் இமேஜிங் செயல்முறை செய்யப்படுகிறது. இதன் செயல் மிகவும் எளிதானது. சாதனத்தின் மேல் செல்கள் வைக்கப்படும். செல் வழியாக ஒளி வீசும். முன்பு கண்ணுக்கு தெரியாமல் இருந்த செல் அமைப்பு மறுபுறம் தெரியும். எதிர்காலத்தில் இத்தொழில்நுட்பத்தை கேமரா லென்ஸில் ஒருங்கிணைப்பது தான் நோக்கம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement