வாழ்க்கையில் பக்தியும், ஒழுக்கமும் பேணுவது, ஆசிரியர்களுக்கு தன்னையே முழு மனதுடன் அர்ப்பணிப்பது, பெண் ஆசை, பொன் ஆசைக்கு இடம் கொடுக்காமல் இருப்பது, கணவர் முன்னிலையில் மட்டுமே பெண்களுக்கு சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட கருத்துகளை உள்ளடக்கி இருந்ததால், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களால் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஏற்கப்பட்ட சமஸ்கிருதம் உறுதிமொழி விவகாரம் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்பட்ட ‘மகரிஷி சரகர்’ உறுதிமொழியின் விவரத்தை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த உறுதிமொழியின் தமிழாக்கம் இதுதான்:
* நான் மருத்துவக் கல்வியைப் பயிலும் காலகட்டம் முழுவதும், சுயக் கட்டுப்பாடும், பக்தியும், ஒழுக்கமும் நிறைந்த வாழ்வை வாழ்வேன். எனது ஆசிரியர்களுக்கு என்னை முழு மனதுடன் அர்ப்பணிப்பேன். ஆசானின் மகனாக அல்லது மகளாக நடந்து கொண்டு அவரின் நலன் மற்றும் மகிழ்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன். எனது செயல்கள் அனைத்துமே கண்ணியமானதாக, சேவை மனப்பான்மை கொண்டதாக, ஒழுங்கீனம், பொறாமையிலிருந்து விலகியதாக இருக்கும். மற்றவர்களுடன் பழகும்போது பொறுமையாக, கீழ்ப்படிதலுடன், அமைதியாக, அடக்கமாக, சிந்திக்கும் திறன் கொண்டு நடப்பேன். எனது ஆசான் விரும்பும் இலக்கை எட்ட அதை நோக்கி எனது முழு முயற்சியை செலுத்திப் பயணிப்பேன். ஒரு மருத்துவராக வெற்றியைப் பெறவும், புகழை எட்டவும், பணம் சம்பாதிக்கவும் நான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் மனிதகுல நலன் மேலோங்கியிருக்கும்படி நடப்பேன்.
* நான் எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும், இல்லை… எத்தனை சோர்வாக இருந்தாலும் நோயாளிக்கு உதவத் தயாராக இருப்பேன். பணத்துக்காகவும், சுய லாபத்திற்காகவும் ஒருபோதும் எனது நோயாளியை காயப்படுத்தும்படி நடக்க மாட்டேன். பெண் ஆசை, பொன் ஆசைக்கு இடம் கொடுக்க மாட்டேன். என் சிந்தனையில் கூட ஒழுங்கீனம் உதயமாகாமல் இருப்பதாக.
* நான் உடுத்தும் ஆடைகள் நாகரிகமானதாகவும் அதேவேளையில் பார்க்க மிடுக்காகவும், நம்பிக்கை தருவதாகவும் இருக்கும். நான் எப்போதும் இனிமையான, தூய்மையான, பொருத்தமான, உண்மையான, சகாயமான, பணிவான வாத்தைகளையே பயன்படுத்துவேன். இடத்துக்கும், நேரத்துக்கும் ஏற்றபடி நடந்துகொள்வேன்.
* எனது அறிவு புதிய பரிமாணங்களை எட்ட எப்போதும் முயற்சிப்பேன்.
* நான் ஓர் ஆண் மருத்துவராக இருக்கும்பட்சத்தில், எப்போதும் பெண் நோயாளிக்கு அவரது கணவர் அல்லது நெருங்கிய உறவினர் முன்னிலையிலேயே சிகிச்சை அளிப்பேன்.
* ஒரு நோயாளியை பரிசோதனை செய்யும்போது எனது கவனம் முழுவதும் நோயைக் குணமாக்குவதிலேயே இருக்கும். நோயாளியின் தனிப்பட்ட விவரங்களைப் பற்றியோ அவரின் குடும்ப விஷயங்களைப் பற்றியோ பேச மாட்டேன்.
* ஒரு மருத்துவராக நான் பெற்ற அறிவையும், திறனையும் ஒருபோதும் ‘நான்’ என்ற அகந்தையுடன் வெளிப்படுத்த மாட்டேன். அதனால், பிறர் அவமதிக்கப்பட்டதாக உணரலாம்.
– இவ்வாறு அந்த உறுதிமொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் உள்ள சில பிற்போக்கான விஷயங்களை மேற்கோள் காட்டி, மருத்துவர்களுக்கு இத்தகைய உறுதிமொழி தேவைதானா என்று இணையவாசிகள் பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
மாணவர்கள் விளக்கம்:
முன்னதாக, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவைத் தலைவர் ஜோதிஷ்குமாரவேல், பொதுச்செயலாளர் வேணுகோபால், துணைத் தலைவர் தீபிகா விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாக கூறும்போது, “மதுரை மருத்துவக் கல்லூரியில் கடந்த 30-ம் தேதி முதலாம் ஆண்டுமாணவர்கள் வரவேற்பு விழா நடந்தது. இதில் நாங்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்தோம் என்று தகவல் பரப்பப்படுகிறது. அது தவறானது. நாங்கள் சமஸ்கிருதத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட உறுதிமொழியைத்தான் படித்தோம். ஒரிஜினல் சமஸ்கிருதம் உறுதிமொழியை நாங்கள் படிக்கவில்லை.
தேசிய மருத்துவக் கவுன்சில் வழிகாட்டுதலில் மருத்துவக் கல்வியில் புதிதாகச் சேரும் மாணவர்களுக்கு `மகரிஷி சரகர்’ உறுதிமொழியை பரிந்துரை செய்தது. அதேநேரத்தில் இந்த உறுதிமொழியைத்தான் படிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கவில்லை. தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரகமும் `இப்போகிரெடிக்’ உறுதிமொழியைத்தான் எடுக்க வேண்டும், `மகரிஷி சரகர்’ உறுதிமொழியை எடுக்கக்கூடாது என்றுஎந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை.
நேற்று முன்தினம் சர்ச்சையானபிறகுதான் தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரகம் ‘இப்போகிரெடிக்’ உறுதிமொழியைத்தான் எடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கை வந்திருக்கிறது. இந்த உறுமொழியை மாணவர் பேரவை முடிவு செய்து படித்தோம். இதற்கும் கல்லூரி நிர்வாகத்துக்கும், டீனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த உறுதிமொழியை படிப்பதால் எந்த தவறும் இல்லை என்று நினைத்தே அவர்கள் கவனத்துக்கு நாங்கள் கொண்டு செல்லவில்லை. கடைசி 2 நாளில் விழா ஏற்பாடுகளை செய்திருந்தோம். அவசரத்தில் அந்த உறுதிமொழியை அவர்களிடம் நாங்கள் காட்டவும், அவர்கள் அதைப் பார்க்கவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. திட்டமிட்டு எதுவும் நடக்கவில்லை.
தேசிய மருத்துவக் கவுன்சில் கடந்த மார்ச் 31-ம் தேதி தான் புதிதாக சேரும் மருத்துவ மாணவர்களுக்கு `மகிரிஷி சரகர்’ உறுதிமொழியை பரிந்துரை செய்தது. இந்த உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்று யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை” என்றனர்.
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள்:
இதனிடையே, மதுரை அரசு மருத்துவமனை ‘டீன்’ மாற்றத்தை மறுபரிசீலனை செய்து மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் செந்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்த அவர் வெளியிட்ட அறிக்கையில், “மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மகரிஷி சரகர் உறுதிமொழியை மருத்துவ மாணவர்கள் எடுத்ததால் டீன் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையத் தலைவர் அருணா வணிகர், மகரிஷி சரகர் உறுதிமொழியை அனைத்து மருத்துவ மாணவர்களுக்கும் பிரமாணம் செய்ய வேண்டும் என்று கூறி அதைச் சுற்றறிக்கையாகவும் அனுப்பி இருந்தார்.
அதேநேரத்தில், மதுரை மருத்துவக் கல்லூரி நிகழ்ச்சியில் சம்ஸ்கிருதத்தைப் பயன்படுத்தி எவ்வித உறுதிமொழியும் எடுக்கவில்லை என்பதை முதல்வருக்கு தெரிவிக்க விரும்புகிறோம். ஆங்கிலத்தில்தான் எடுக்கப்பட்டது. ஆனால், சம்ஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்ததாகத் தவறாக செய்தி பரவியது. இது முற்றிலும் பொய்யானது. அதனால், முதல்வர் கனிவுடன் பரிசீலனை செய்து ரெத்தின வேலுவை மீண்டும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீனாக பணியமர்த்தி உத்தரவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.