கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பண்ணைத் தோட்டத்தில் குதிரை ஒன்றை அடித்துக் கொன்ற சிறுத்தை சிசிடிவி கேமராவில் சிக்கியுள்ளது. பேளாளம் – நெல்லுமார் சாலையில் வனப்பகுதியை ஒட்டி, பெங்களூருவைச் சேர்ந்த ஒருவரது பண்ணைத் தோட்டம் உள்ளது.
இந்த பண்ணைத் தோட்டத்தில் 20க்கும் மேற்பட்ட குதிரைகளை உரிமையாளர் வளர்த்து வருகிறார். அவைகளில் 5 வயது மதிக்கத்தக்க பெண் குதிரை ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன் மர்ம விலங்கால் அடித்துக் கொல்லப்பட்டுக் கிடந்தது.
குதிரையை அடித்துக் கொன்ற விலங்கு எது எனத் தெரிந்துகொள்ள உடலை அகற்றாமல் விட்ட வனத்துறையினர், அங்கு சிசிடிவி கேமராவை பொருத்தினர். அவர்கள் நினைத்ததுபோலவே, சிறுத்தை ஒன்று மீதமிருந்த மாமிசத்தை சாப்பிட வந்து சிசிடிவி கேமராவில் சிக்கியுள்ளது.
கொல்லப்பட்ட குதிரை அதிகமாக சேட்டை செய்ததால், அதன் முன்னங்கால்களை மட்டும் பண்ணை ஊழியர்கள் கட்டிப்போட்டுள்ளனர். சிறுத்தையைப் பார்த்து மற்ற குதிரைகள் தப்பியோடிய நிலையில், கால்கள் கட்டப்பட்ட குதிரை மட்டும் ஓட முடியாமல் சிறுத்தையிடம் சிக்கிக் கொண்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். தற்போது சிறுத்தையைப் பிடிக்க ஆங்காங்கே கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.