மலையாளத் திரைத்துறையில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் பணியாற்றிவரும் விஜய் பாபு என்பவர் பெண் நடிகையை பாலியல் தொந்தரவுகள் செய்ததாக அவர்மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. இந்நிலையில் `அம்மா’ என்று அழைக்கப்படும் மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கம் விஜய் பாபு மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. மேலும் இது பற்றிக் கூறிய `அம்மா’ அமைப்பின் துணைத் தலைவர் மணியன் “ஒருவர் மீது புகார் இருப்பதன் காரணமாகவே அவரை சங்கத்தை விட்டு நீக்கிவிட முடியாது. அவர் தரப்பு நியாயங்களைக் கேட்க வேண்டும்; அதுகுறித்துப் பல முறை விசாரிக்க வேண்டும். இந்த அமைப்பின் உறுப்பினரைப் பாதுகாப்பதும் எங்கள் கடமை. `அம்மா’ அமைப்பின் செயற்குழுவில் இருந்து விலகுவதாக விஜய் பாபு முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறோம், தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்த பிறகு, விஜய் பாபு மீண்டும் `அம்மா’ அமைப்பின் செயற்குழுவில் இணைவார்” என்று கூறியிருந்தார்.
இதையடுத்து `அம்மா’ அமைப்பின் உள்புகார் கமிட்டியில் இருந்த பிரபல மலையாள நடிகையான மாலா பார்வதி, `அம்மா’ அமைப்பு விஜய் பாபு மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உள்புகார் கமிட்டியிலிருந்து தான் விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
இதுபற்றிக் கூறிய அவர், “அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 5 பேர் கொண்ட உள்புகார் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. பலாத்கார வழக்கில் விசாரணை நடைபெற்று வந்தாலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் குற்றம் செய்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் ‘அம்மா’அமைப்பு இந்த விவகாரத்தை மென்மையாக்கும் என்றும், தலைமறைவாக உள்ள ஒருவரிடமிருந்து கடிதம் கிடைக்கும் என்றெல்லாம் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதுபோன்ற பிரச்னையில் நடவடிக்கை எடுப்பது உள்புகார் கமிட்டியின் சட்டம். இதற்கிடையே அமைப்பு அவரைப் பதவி விலகச் சொல்வதற்கும், அவர் விலகி இருக்க முடிவு செய்ததற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. விஜய் பாபுவின் விலகலை ஏற்பதற்கு முன், அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்” என்றார்.
மேலும், அவரது ராஜினாமா கடிதத்தில், “கமிட்டியில் உறுப்பினராக இருப்பது மிகப்பெரிய பொறுப்பு, குழு தன்னாட்சி பெற்றால் மட்டுமே அதைச் செய்ய முடியும். ஆனால், இப்போது மனசாட்சிப்படி என்னால் என் பொறுப்புகளை நிறைவேற்ற முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.