வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோபன்ஹேகன்: ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று (மே 3) டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் சென்றார். டென்மார்க் பிரதமர் மெட்டே பெடரிக்சன் விமான நிலையத்திற்கே வந்து மோடியை வரவேற்றார். இதனை சிறப்பு வரவேற்பு என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியுள்ளார்.
ஜெர்மன் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று சிறப்பு விமானத்தில் டென்மார்க் தலைநகரை அடைந்தார். இந்திய முறைப்படி மேள தாளங்கள் முழங்க சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக டென்மார்க் பிரதமர் மெட்டே பெடரிக்சன் நேரடியாக விமான நிலையத்திற்கு வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். பிரதமர் மோடியின் முதல் டென்மார்க் பயணம் இது. மோடியை தனது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்ற டென்மார்க் பிரதமர் அங்கு விஸ்தாரமாக உள்ள புல்வெளி பரப்பை சுற்றிக்காட்டி அது குறித்து பேசினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
வர்த்தகம், அரசியல் என பல்வேறு விஷயங்களில் டென்மார்க்குடனான இரு தரப்பு உறவு குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசுவர். மேக் இன் இந்தியா, ஜல் ஜீவன் திட்டம், டிஜிட்டல் இந்தியா போன்ற நாட்டின் முக்கிய திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் 200க்கும் மேற்பட்ட டென்மார்க் நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதே போல் டென்மார்க்கில் 60க்கும் மேற்பட்ட ஐ.டி., நிறுவனங்களும், 16 ஆயிரம் இந்தியர்களும் உள்ளனர்.
டென்மார்க் பிரதமருடான சந்திப்புக்கு பின்னர் நாளை இந்தியா – நார்டிக் மாநாட்டில் மோடி பங்கேற்க உள்ளார். அம்மாநாட்டில் டென்மார்க் மட்டுமின்றி ஐஸ்லாந்து, பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் நார்வே ஆகிய பிரதமர்களும் பங்கேற்க உள்ளனர். மேலும் டென்மார்க் ராணி இரண்டாம் மார்கிரேத்தை சந்திக்கிறார். நாளை (மே 4) அங்கிருந்து புறப்பட்டு பிரான்ஸ் செல்லும் அவர், அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்திக்கிறார்.
டென்மார்க் பிரதமருடனான சந்திப்பிற்கு பின்னர் பிரதமர் மோடி கூறியதாவது: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி , சுகாதாரம், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர் மோலாண்மை, பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கியமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் டென்மார்க்கை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் எளிதாக தொழில் செய்யும் திறன் ஆகியவற்றால், இந்த நிறுவனங்கள் பயன்பெற்றுள்ளன.
உக்ரைனில் பிரச்னைக்கு தீர்வு காணவும், உடனடியாக போர் நிறுத்தத்திற்கு, பேச்சுவார்த்தை பாதை மற்றும் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
Advertisement