பிரதமர் மோடி
குறித்து ட்விட்டரில் அவதூறாகக் கருத்து பதிவிட்டதாக குஜராத் மாநில சுயேட்சை எம்.எல்.ஏ.,வும், காங்கிரஸ் ஆதரவாளருமான
ஜிக்னேஷ் மேவானி
மீது அசாம் மாநில பாஜக தலைவர் அருப் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அசாம் மாநில போலீசார், ஜிக்னேஷ் மேவானியை குஜராத்தில் கடந்த 20ஆம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த ஜிக்னேஷ் மேவானி, பெண் காவலர் ஒருவரை தாக்க முயன்றதாக மீண்டும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் ஜிக்னேஷ் மேவானிக்கு ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து, அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், டெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஜிக்னேஷ் மேவானி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பிரதமர் அலுவலகத்தில் என்னை அழிக்க முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதிதான் எனது கைது. இந்த ஆண்டு இறுதியில் மாநிலத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில், அதற்கு முன்பாக என்னுடைய பெயரைக் கெடுக்க சதி நடைபெற்று வருகிறது. ஒரு பெண்ணைப் பயன்படுத்தி என்னைப் பொய் வழக்கில் சிக்க வைக்க பிரதமர் அலுவலகம் இந்த சதியில் ஈடுபட்டுள்ளது.” என்று சரமாரியாக மத்திய பாஜக அரசை சாடினார்.
அப்போது, புஷ்பா படத்தில் வருவது போன்று தனது தாடியை தடவி, ‘பூ என்று நினைத்தீர்களா? இது நெருப்பு; ஒருபோதும் அடிபணிய மாட்டேன்’ என்று ஜிக்னேஷ் மேவானி தெரிவித்தார். புஷ்பா திரைப்படத்தில் ஹீரோ அல்லு அர்ஜுன் எதிரிகளிடம் சவால் விடுக்கும்போது, “நான் புஷ்பா, புஷ்பராஜ், புஷ்பா என்றால் ஃபிளவர்னு (பூ) நினைச்சீங்களா, ஃபையர் (நெருப்பு)” என்று கூறுவார். அதேபாணியில் ஜிக்னேஷ் மேவானியும் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு முதல் வழக்கில் ஜாமீன் கிடைத்து இரண்டாவது வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடிக்கு சென்ற போது, புஷ்பா வசனத்தை மேற்கோள்காட்டி ஜினேஷ் மேவானி பேசினார்.
“எனக்கு ஜாமீன் வழங்கும்போது நீதிமன்றம் முன்வைத்த கடுமையான கருத்துகளுக்கு அசாம் மாநில பாஜக அரசு வெட்கப்பட வேண்டும். எனது கைது நடவடிக்கை என்பது 56 இஞ்ச்-இன் கோழைத்தனம். குஜராத் பெருமையை இது குலைத்துவிட்டது.” என்றும் பிரதமர் மோடியை அப்போது ஜிக்னேஷ் மேவானி கடிமையாக விமர்சித்தார்.