காபூல்,
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றினர். 1996-2001- ஆம் ஆண்டு வரையிலான தலீபான்கள் ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடைபெற்றன. இதனால் ஆட்சி அதிகாரம் தலீபான்கள் வசம் சென்றதும் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை தலீபான்கள் விதிக்கக் கூடும் என ஆப்கன் மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் கவலை தெரிவித்தனர்.
ஆனால், முந்தைய ஆட்சிமுறையை போன்று தங்களின் தற்போதைய ஆட்சி நிர்வாகம் இருக்காது என தலீபான்கள் உறுதி அளித்தனர். ஆனால், அதற்கு நேர்மாறாக தலீபான்களின் நடவடிக்கை அமைந்து வருகிறது. ஏற்கனவே, பெண்கள் கல்வி கற்க தடை , நீண்ட தூரம் பெண்கள் தனியாக பயணிக்கத் தடை என ஏராளமான பழமைவாத கட்டுப்படுகளை அமல்படுத்தியுள்ள தலீபான்கள், தற்போது, பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கக்கூடாது என்று ஒட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வாய்மொழியாக இத்தகைய அறிவுறுத்தல்களை பயிற்சி பள்ளிகளுக்கு தலீபான்கள் வெளியிட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் பெரிய நகரங்களில் பெண்கள் வாகனம் ஓட்டுவதை தற்போது பரவலாக காண முடியும் என்ற நிலையில், தலீபான்களின் இந்தக் கட்டுப்பாடுகள் வரும் தலைமுறையினரை பாதிக்கும் என்று ஆப்கானிஸ்தான் பெண் உரிமை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர்.