சென்னை: தமிழகத்தில் மே 5ந்தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை தேர்வுத் துறை அறிவித்து உள்ளது. அத்துடன் முகக்கவசம் கட்டாயம் என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக பொது மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டிருந்தது.
தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி வரும் 5ந்தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்குகிகறது. தொடர்ந்து, மே 6-ம் தேதி முதல் 10-ம் வகுப்புக்கும், மே 10-ம் தேதி முதல் பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடைபெறுகிறது.
இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனி மனித இடைவெளி விட்டு தேர்வு நடைபெற்றாலும் மாஸ்க் அணிந்து எழுதவேண்டும். தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் கண்காணிப்பாளர்களும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் தேர்வுத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில்,
பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் செல்போன்கள் வைத்திருப்பதற்கு தடை விதித்து தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன்/ இதர தகவல் தொடர்பு சாதனங்கள் வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்வின்போது ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் காப்பி அடித்தால், அடுத்த ஓராண்டுக்கு தேர்வெழுத தடை விதிக்கப்படும்
பொதுத்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தால், அடுத்து தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும்
இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.