தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை மறுநாள் (மே 5) தொடங்க உள்ள நிலையில், பள்ளி கல்வி இயக்ககம், பொதுத்தேர்வு வழிகாட்டுதல்களையும் விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. பொதுத்தேர்வு மையத்திற்கு ஆசிரியர்கள் செல்போன் எடுத்துவர தடை விதிக்கப்படுகிறது என்றும் பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் நிரந்தர தடைவிதிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயகுநர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அடுத்தடுத்து பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை மறுநாள் (மே 5) தொடங்க உள்ளது. அதனால், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு எழுதும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மாணவர்கள் தனிமனித இடைவெளியைப் பின்பற்றி தேர்வு எழுதினாலும், முகக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவித்திருந்தது. மேலும், தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் பறக்கும்படை அதிகாரிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர், தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செல்போன் உள்ளிட்ட இதர தகவல் தொடர்பு சாதனங்களை பொதுத் தேர்வு மைத்திற்கு எடுத்து வரக்கூடாது. அப்படி செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டதால் அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை தெரிவ்த்துள்ளார்.
மேலும், பொதுத் தேர்வு மையங்களில் உள்ள வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை தெரிவித்து பள்ளி தேர்வுகள் இயக்ககம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் பருவத் தேர்வு ரத்து செய்யப்படுவதோடு தேர்வெழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும். தேர்வில் காப்பி அடித்தால் மாணவரின் தேர்வை ரத்து செய்வதோடு ஓராண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்படும். தேர்வு அறைகளில் நடக்கும் 15 வகையான குற்றங்களின் தன்மைகள், அதற்கான தண்டனையை பள்ளி தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“