பிரித்தானிய மகாராணியாருக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டிய பாதுகாவலர்களையே பொய் சொல்லி ஏமாற்றி, அவர்களுடன் தங்கியிருக்கிறார் மோசடியாளர் ஒருவர்.
விண்ட்சர் மாளிகைக்கு அருகில் மகாராணியாரின் பாதுகாவலர்கள் தங்கும் கட்டிடத்தின் வாசலுக்குச் சென்ற அந்த நபர், தான் Father Cruise என்றும், பட்டாளத்தின் பாதிரியாரான Rev Matt Colesஇன் நண்பர் என்றும் கூறியிருக்கிறார்.
உடனே அவரை அன்புடன் வரவேற்ற பாதுகாவலர்கள், அவரைத் தங்களுடன் தங்க அனுமதித்துள்ளார்கள்.
இரவு அங்கு உணவு உண்டு தங்கிய அந்த நபருக்கு, மறு நாள் காலை சிற்றுண்டியும் கொடுத்திருக்கிறார்கள் பாதுகாவலர்கள்.
ஆனால், சிறிது நேரத்தில் அங்கு வந்த பொலிசார் அவரை அங்கிருந்து வெளியேற்றியிருக்கிறார்கள். பிறகுதான் மகாராணியாரின் பாதுகாவலர்களுக்கு அந்த நபர் உண்மையில் ஒரு பாதிரியார் அல்ல என்பதும், அவர் தங்களை ஏமாற்றி தங்களுடன் தங்கியதும் தெரியவந்துள்ளது.
பரபரப்பை ஏற்படுத்திய இந்த விடயம் தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கிறிஸ்துமஸ் தினத்தன்று விண்ட்சர் மாளிகைக்குள் ஒருவர் வில் அம்புடன் நுழைய முற்பட்டது நினைவிருக்கலாம். ஆக, மகாராணியாரின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்படுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.