நாசிக்: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர். இது கடந்த 6 ஆண்டுகளில் அதிகபட்ச உயிர்பலி என்று மாநில அரசு தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில், வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, ராஜஸ்தான், மராட்டியம் உள்ளிட்ட வட மாநிலங்களில் வெப்பம் கடுமையாக காணப்படுகிறது. வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சில மாநிலங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் வெயில் கொழுத்தி வருகிறது. அனல் காற்றும் வீசி வருகிறது சில மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் வெயிலுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு 25 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக மாநில சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தியில், மராட்டியத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெயில் தாக்குதலுக்கு 19 பேர் உயிரிழந்தனர். அதற்கு பின் 6 ஆண்டுகள் கழித்து நடப்பு 2022ம் ஆண்டில், மராட்டியத்தில் கடுமையான வெயிலால் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 25 பேர் உயிரிழந்து உள்ளனர். அதாவது, மே 1ந்தேதி வரையில் மொத்தம் 381 வெயில் தாக்குதல் பாதிப்புகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக நாக்பூரில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர். அவுரங்காபாத் (5), நாசிக் (4) அடுத்தடுத்து உயிரிழப்பு எண்ணிக்கையில் உள்ளனர் என தெரிவித்துள்ளது.