மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த T.கல்லுப்பட்டி புதுமாரியம்மன் கோவில் திருவிழாவில் கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள், ஒருவரை கத்தியால் வெட்டியதோடு, தன்னை பிடிக்க முயன்ற பலரையும் வெட்டி விட்டு தப்பிய வீடியோ வெளியாகி உள்ளது. போலீசாரால் தடுக்க இயலா கஞ்சா புழக்கத்தின் விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த T.கல்லுப்பட்டியில் நடைபெற்ற புதுமாரியம்மன் கோவில் திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான பல்வேறு வேடங்கள் அணிந்து நேர்த்திகடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. T.கல்லுப்பட்டி, வன்னிவேலம்பட்டி, சத்திரப்பட்டி, காரைக்கேணி, அம்மாபட்டி உள்ளிட்ட 48 கிராமங்களில் இருந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக பலவேஷங்கள் அணிந்து வந்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து கடவுள்கள் மற்றும் அரக்கர்கள், பெண்கள், சித்தர்கள், பூதங்கள் மட்டுமின்றி நவீன காலத்தில் திரைகதாபாத்திரங்களான பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்., ஸ்பார்ட்டன்ஸ் 300 பருத்தி வீரர்கள்., மார்ஷ்மல்லோ மற்றும் முள்படுக்கை, ஏலியன், தாவரங்கள், ஜோக்கர், காட்டுவாசிகள் உள்ளிட்ட பல்வேறு வினோத வேடங்கள் அணிந்து கோவில் முன்பு ஒன்று கூடி ஒவ்வொருவரும் தங்களுக்கு என்று தனி தனி வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர்
T.கல்லுப்பட்டி வழியாக தென்காசி செல்லும் சாலையில் பொண்ணு மாப்பிள்ளை வேடமணிந்து சீர்வரிசையுடன் ஊர்வலமாக வந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்திக் கொண்டிருந்த போது கூட்டத்தில் வந்த இளைஞர்கள் சிலர் மது மற்றும் கஞ்சா போதை தலைக்கேறி ரகளையில் ஈடுபட்டனர்
அங்கிருந்த பெரியவர்கள் எச்சரித்ததால் ஆத்திரம் அடைந்த கஞ்சா குடுக்கி இளசுகள், தங்களை எச்சரித்த நபரை சுத்துபோட்டு கத்தியால் வெட்டினர்.
கஞ்சா போதையில் கையில் கத்தியுடன் கூட்டத்திற்குள் புகுந்து தப்ப முயன்ற இளைஞரை மற்றவர்கள் மடக்கிப்பிடிக்க முயல அவர்களை நோக்கியிம் கத்தியை வீசி, சிலரை கத்தியால் கிழித்து விட்டு தப்பி ஓடினான்
அவனுக்கு உடனன் வந்த இளைஞர்கள் உதவியாதால் அவனை அங்கிருந்தவர்களால் பிடிக்க இயலவில்லை, வழி நெடுகிலும் அந்த இளைஞர் சண்டையிட்டவாறே கூட்டாளிகளுடன் சென்றான்.
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளை வைத்து போலீசார் கூட்டத்திற்குள் கத்தியை வீசிய இளைஞனை தேடினர். சிறிது நேரத்தில் மீண்டும் கூட்டத்திற்குள் கும்பலாக நுழைந்த அந்த இளைஞர் கூட்டத்தை T.கல்லுப்பட்டி போலீசார் சுற்றிவளைத்து பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவிழா நடைபெறும் இடத்திற்கு சில மீட்டர் தொலைவில் 4 மதுபானக்கடைகள் உள்ளதாகவும், 48 ஊர் மக்கள் கூடும் திருவிழாவில், முன் எச்சரிக்கையாக 4 மதுக்கடைகளையும் அடைக்கவும், தாராளமாக புழங்கும் கஞ்சாவை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது என்று அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் தமிழகத்தில் கஞ்சாவை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் , திருவிழா தாக்குதலில் பிடிபட்ட இளைஞர்களின் மூலமாக கஞ்சா விற்பனை எங்கெங்கு நடக்கின்றது ? யார் யார் விற்கிறார்கள் ? என்பதை துப்பு துலக்கி இருப்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!