மதுரை: ‘தமிழக அரசு மொழிக் கொள்கையில் தீவிரமாக இருக்கும் நிலையில், தேசிய மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்த மகரிஷி சரகர் உறுதிமொழியை ஏற்க வேண்டாம் என்று ஏன் சுற்றிக்கை அனுப்பவில்லை?’ என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தவறுதலாக மகரிஷி சரகர் உறுதிமொழியை மருத்துவ மாணவர்கள் எடுத்த விவகாரத்தில் டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த விவகாரத்திற்கு பிறகுதான் மதுரை மருத்துவக் கல்லூரியை போல் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்பட மொத்தம் 10 மருத்துவக் கல்லூரிகளில் இதுபோல் நடந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழாவில் இதே உறுதிமொழி படிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றதாலே இந்த உறுதிமொழி விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்தது.
அதனைத் தொடர்ந்து மருத்துவக் கல்வி இயக்குநர் தற்போது அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் எங்கெங்கு இதுபோல் தவறு நடந்துள்ளதோ, அங்கு விசாரித்து அனைத்து கல்லூரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். ஆனால், தற்போது வரை இதுபோன்ற உறுதிமொழி எடுத்த கல்லூரிகளின் ‘டீன்’கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மதுரை அரசு மருத்துவமனை ‘டீன்’ ரத்தினவேல் எந்த அரசியல் சார்பும் இல்லாதவர் என்பதால் அவர் மீது அரசியல் சாயம் பூசி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மதுரை அரசு மருத்துவர்கள், பணியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் அவர் மீதான நடவடிக்கை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கமும், ‘டீன்’ ரத்தினவேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதனால், அவசர கோலத்தில் சரியான விசாரணை நடத்தாத சுகாதாரத்துறை, மருத்துவக்கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கு தற்போது இந்த விவகாரம் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய மருத்துவ கவுன்சில் கடந்த மார்ச் 31 (2022) அன்றுதான் புதிதாக சேரும் மருத்துவ மாணவர்கள் மகிரிஷ் சரகர் உறுதிமொழியை பரிந்துரை செய்திருக்கிறது. இந்த அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் பேரவை நிர்வாகிகள், இந்த உறுதிமொழியை எடுத்திருக்கின்றனர். ஆனால், இந்த விவகாரத்திற்கு முன்பு வரை மருத்துவ கல்வி இயக்குநர், சுகாதாரத்துறை செயலர் யாரும் தேசிய மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்த மகிரஷ் சரகர் உறுதிமொழியை பின்பற்ற வேண்டாம், பாரம்பரியமாக நடக்கும் இப்போகிரெடிக் உறுதிமொழியைதான் எடுக்க வேண்டும் என்ற என்ற சுற்றறிக்கையும், உத்தரவும் அனுப்பவில்லை என்று மருத்துவ மாணவர் பேரவை நிர்வாகிகளும், மருத்துவக்கல்லூரி அதிகாரிகளும் தெரிவித்தனர். அதனாலே, தவறுதலாக மகரிஷ் சரகர் உறுதிமொழியை தேசிய மருத்துவ கவுன்சில் வெப்சைட்டில் இருந்து பதவிறக்கம் செய்து படித்துவிட்டதாகவும் கூறினர்.
ஆனால், தற்போது மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபுவோ, ”சுகாதாரத்துறை செயலாளர் பிப் 11-ம் தேதியே சுகாதாரத் துறை செயலர், சுகாதாரத் துறை, மருத்துவக் கல்வி இயக்குநரகம் அனுப்பும் சுற்றிக்கை, உத்தரவுகளை மட்டுமே பின்பற்ற வேண்டும், மற்ற அதிகாரபூர்வற்ற சுற்றறிக்கைகள், சமூக வலைதளங்களில் வரும் போலி சுற்றறிக்கை பின்பற்றக்கூடாது என்று தெளிவாக ஒரு சுற்றிக்கை அனுப்பியிருக்கிறார்” கூறியுள்ளார்.
இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியது: ”பிப்.11-ம் தேதி சுகாதாரத் துறை செயலாளர் அனுப்பிய சுற்றிக்கை, பொத்தாம் பொதுவாக மருத்துவக் கல்லூரி நடவடிக்கைகள் தொடர்பாக அனுப்பிய ஒரு பொதுவான சுற்றிக்கை. அதில், எந்த இடத்திலும் எந்த உறுதிமொழி எடுக்க வேண்டும் என்ற விவரம் எதுவுமே இல்லை. சுற்றறிக்கை என்பது குறிப்பிட்ட விஷயத்தை மேற்கோள் காட்டுவதாக இருக்க வேண்டும். அதுவும் தமிழக அரசு மொழி கொள்கை விஷயத்தில் இவ்வளவு தீவிரமாக இருக்கும் நிலையில், மகரிஷி சரகர் உறுதிமொழியை தேசிய மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்த நிலையில் அதை உடனடியாக மறுத்து கடந்த காலங்களை போலவே இப்போகிரெடிக் உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு சுற்றிக்கை அனுப்பியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு தற்போது ஏதோ ஒரு காரணத்திற்காக பொதுவாக அனுப்பிய சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி நாங்கள் ஏற்கெனவே அனுப்பிவிட்டோம் என்று கூறுவது ஏற்புடையது அல்ல” என்றனர்.