புதுடெல்லி: காத்மாண்டுவில் நடந்த இரவு விடுதி விருந்தில் மது அருந்திக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் ராகுல்காந்தி பங்கேற்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நேபாளம் நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நண்பர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளார். அங்குள்ள இரவுநேர விடுதியில் நடந்த விருந்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். டிஸ்கோ டான்ஸ் கருவியின் மூலம் இசை முழக்கம் முழங்கியது. அங்கிருந்த சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அந்த பகுதியில் ராகுலும் இருந்தார். அதுதொடர்பான வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. காத்மாண்டு போஸ்ட் பத்திரிகையில் வெளியான செய்தியின்படி, திங்கட்கிழமை பிற்பகல் ராகுல் காந்தி நேபாளம் தலைநகர் காத்மாண்டுக்கு வந்தார். மியான்மர் நாட்டின் முன்னாள் நேபாள தூதர் பீம் உதாசின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டார். உதாஸின் மகள் சும்னிமா, பிரபல சர்வதேச பத்திரிகையின் நிருபர் நிமா மார்ட்டின் ஷெர்பாவை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக அந்த பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஒன்றிய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘ராகுல்காந்தியை பொருத்தமட்டில் அவர் முழுநேர சுற்றுலாப் பயணி; பாசாங்குத்தனம் கொண்ட பகுதிநேர அரசியல்வாதி. பொய்யான கதைகளையும், கருத்துக்களையும் புனைந்து கூறக்கூடியவர். நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார். ராகுல் காந்தியின் கருத்துகள், அவரது சொந்த கட்சியினரையே தவறாக வழிநடத்துகிறது’ என்றார். இதனிடையே, வைரலாகும் வீடியோவில் இருப்பது ராகுல் இல்லை என்று கூறப்படுகிறது.