“மனிதனை மனிதன் சுமப்பதில்லை… உயிரைக் கொடுத்தாவது பல்லக்கை தூக்குவோம்!" – மதுரை ஆதீனம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் பாரம்பர்யமாக நடைபெறும் பட்டினப் பிரவேசம் விழாவில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு அந்தப் பகுதியின் கோட்டாட்சியர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மனிதனை மனிதன் சுமக்க கூடாது என்ற திராவிடர் கழகத்தின் கோரிக்கையின்பேரில், பல்லக்கு தூக்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக மதுரை ஆதீனத்தின் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “நான் தருமபுர ஆதீனத்தில்தான் படித்தேன். தமிழ்மொழி வளர்ப்பையும், சைவத்தையும், தமிழையும் பாதுகாக்கும் ஆதீனம் தருமபுர ஆதீனம். பட்டினப் பிரவேச நிகழ்ச்சி 500 ஆண்டுகளாக நடக்கும் பாரம்பர்யம். 500 ஆண்டுகளாக நடக்கும் இந்த பாரம்பர்யத்தை நடத்தக்கூடாது எனக் கூறுவது வருத்தமளிக்கிறது. வெள்ளைக்காரர்கள் ஆட்சி மற்றும் கலைஞர் காலத்தில்கூட இந்த நிகழ்வு நடந்தது. இதற்கு ஏன் தற்போது தடை விதிக்க வேண்டும்.

மதுரை ஆதீனம்

தருமபுர ஆதீன மடத்துக்கு கவர்னர் வருகை தந்ததுதான் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி ரத்தானதுக்கு காரணமாகும். பாரம்பர்ய நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக்கூடாது. உயிரைக் கொடுத்தாவது தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம். பட்டினப் பிரவேச நிகழ்வை நடத்த அரசு அனுமதி கொடுக்க வேண்டும். தருமபுரம் பட்டினப் பிரவேசத்தை முதல்வரே நேரில் வந்து தலைமை தாங்கி நடத்த வேண்டும். முதல்வர் இந்த நிகழ்ச்சியை நடத்த கோரிக்கை விடுக்கிறேன். நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன் உயிரே போனாலும் பரவாயில்லை.

மதுரை ஆதீனம்

பாரம்பர்யமாக நடைபெறும் பட்டினப் பிரவேச நிகழ்ச்சியை நடத்த அரசு உதவி செய்ய வேண்டும். சிலர் எதிர்ப்பதற்காக பாரம்பர்ய நிகழ்வை எப்படி தடை செய்யலாம். மனிதர்களை மனிதர்களே தூக்குவது இல்லை, இது குருவை சிஷ்யர்கள் தூக்கிச்செல்கிறோம். திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கக்கூடாது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.